Published : 10 Apr 2021 03:12 am

Updated : 10 Apr 2021 06:19 am

 

Published : 10 Apr 2021 03:12 AM
Last Updated : 10 Apr 2021 06:19 AM

பெருநகரப் பகுதிகளில் குறைந்த வாக்குப்பதிவு: கேள்விக்கு உள்ளாகும் இணையவழிப் பிரச்சாரம்

social-media-campaign

நடந்து முடிந்த 2021 சட்டப்பேரவைத்தேர்தலில், முக்கிய கட்சிகள் இணைய வழி பிரச்சாரத்தில் தீவிர முனைப்பு காட்டின. குறிப்பாக இளைய தலைமுறை வாக்காளர்களை இது பெரிதும் கவரும் என்றும், இந்த நவீன கணினி உலகில் இது வாக்காளர்களை எளிதில் சென்றடையும்என்றும் நம்பின. ஆனால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தே காணப்பட்டது.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் வாக்குப்பதிவு குறைந்ததற்கு கரோனா தொற்று 2-வது அலை பரவி வருவது முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. கரோனா தொற்று உள்ளவர்கள் வாக்களிக்க வசதியாக மாலை 6 முதல் 7 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் கரோனா தொற்று உள்ளவர்கள் ஒருசிலர் மட்டுமே வாக்களிக்க வந்தனர்.


சென்னையில் 59.06% மட்டுமே வாக்குப் பதிவானதற்கு கரோனாவை காரணமாகச் சொல்லும் அதேநேரம், தமிழகத்தைவிட தீவிரமாக கரோனா தொற்று உள்ள அண்டை மாநிலமான கேரளத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் 70.1 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதும் கவனத்துக்குரியது

வாக்குப்பதிவு எழுப்பும் கேள்விகள்

கடந்த பல மாதங்களாகவே தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தீவிர விவாதப் பொருளாக இருந்து வருகிறது. பதிவுகள், மீம்ஸ்கள், காணொலிகள் வழியாக அரசியல் நிகழ்வுகள் இளைஞர்களின் கவனத்தை அதிகமாக ஈர்க்கத் தொடங்கின. இது தேர்தலில் பிரதிபலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

அதனால் ஆளும் கட்சியான அதிமுகவும் எதிர்கட்சியான திமுகவும் சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பிரச்சாரவிளம்பரங்களுக்கு இந்தமுறை அதிகமாகசெலவு செய்தன. ஃபேஸ்புக், ட்விட்டரில் அரசியல் கட்சிகளின் பிரச்சார விளம்பரங்கள் நிரம்பிவழிந்தன. ஆனால் குறைந்துள்ள வாக்குப்பதிவு சதவீதம், இணைய வழி, சமூக ஊடகப் பிரச்சாரம் தேர்தலில் உண்மையில் தாக்கம் செலுத்துகிறதா எனும் கேள்வியை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து இணைய தொழில்நுட்பம் பற்றி தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளர் சைபர் சிம்மன் கூறியதாவது: சமூக ஊடகங்களில் இணையவழி பிரச்சாரங்களை ஆர்வத்தின் அடிப்படையில் பார்ப்பவர்களேஅதிகம். மேலும், சமூக ஊடகங்களில் அதிகநேரம் செலவழிக்கும் வாய்ப்பும் நேரமும் இருப்பவர்களுக்கு மட்டுமே இணையவழிபிரச்சாரம் அதிகமாகச் சென்றடைகிறது என்பதும் கவனத்துக்குரியது. அவர்கள் ஒருகுறிப்பிட்ட சதவீதத்தினர் மட்டுமே. அது ஒட்டுமொத்த வாக்குப்பதிவிலோ தேர்தல் முடிவுகளிலோ தாக்கம் செலுத்த வாய்ப்பில்லை.

ஆரம்பத்தில் அறுவடை செய்தவர்கள்

2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவும், 2015 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் வெற்றிபெறுவதற்கு இணையம் பெரிய அளவில் பங்களித்தது. ஆனால், இதெல்லாம் இந்தியாவில் சமூகஊடகங்கள் பரவலாகத் தொடங்கிய காலகட்டத்தில் நடந்தவை. இதன்மூலம், சில அரசியல் கட்சிகள் அதன் பயன்களை தேர்தலில் அறுவடை செய்தன. ஆனால், இப்போது எல்லா அரசியல் கட்சிகளுமே இணையவழிப் பிரச்சாரத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டன. எனவே, யாருக்கும் தனித்த பயன் கிடைக்க வாய்ப்பில்லை. சில கட்சிகளுக்கு மிகப் பெரிய ஆதரவு இருப்பதுபோல் இணையத்தில் தோற்றம் இருக்கிறது. ஆனால், தேர்தல் களத்தில் அது பிரதிபலிப்பதில்லை.

இவ்வாறு சிம்மன் கூறுகிறார்.

ஊரடங்கு அச்சத்தின் தாக்கம்

டிஜிட்டல் சமூக ஆய்வாளர் வினோத் ஆறுமுகம் மாறுபட்ட பார்வையை முன்வைக்கிறார்: “சென்னையில் வாக்குப்பதிவு குறைந்திருப்பதற்கு கரோனா குறித்த அச்சம்தான் காரணம் என்று நாங்கள் திரட்டியுள்ள தரவுகள் நிரூபிக்கின்றன.

குறிப்பாக, வீட்டில் முதியவர்களுக்கு தொற்றை பரப்பி விடக்கூடாது என்னும் அச்சத்தில் இளம் வயதினர் கூட வாக் களிக்க வரவில்லை. கரோனா பரவல்அதிகரிப்பதால் தேர்தலுக்குப் பிறகு ‘லாக்டவுன்’ போட்டு விடுவார்கள் என்னும் வதந்தி பரவியதால் வெளி மாநிலங்களில் பணியாற்றும் பலர் சென்னைக்கு திரும்பிவரவில்லை.

எங்கள் பார்வையில் இணையவழி பிரச்சாரம் இந்த முறை குறைவாகவே நடந்துள்ளது. இணையவழி தேர்தல் பிரச்சாரத்தில் போலி தகவல்கள், ஜோடிக்கப்பட்ட காணொலிகள் ஆகியவற்றால் வாக்காளர்களிடம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்’’ என்றார்.

பெங்களுரைச் சேர்ந்த பிராண்டிங் மற்றும் விளம்பர நிபுணர் ஹரீஷ் பிஜோர் கூறும்போது, “இணையவழி பிரச்சாரத்தின் சிறப்பே அதை நாம் விரும்பும் நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்பதுதான். இந்தத் தன்மையால் இணையவழி பிரச்சாரங்கள் இளைஞர்களையும் உழைக்கும் வர்க்கத்தினரையும் அதிகமாக ஈர்த்துள்ளது’’ என்கிறார்.

நிபுணர்கள் இருவேறு கருத்துகளைத் தெரிவித்தாலும், இணையவழி விளம்பரங்கள் நகர்ப்புற வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வரவில்லை என்றேஇதைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த முறை இணையவழிப் பிரச்சாரத்தில் அதிக உழைப்பையும் பணத்தையும் செலவழித்த கட்சிகள், அடுத்த தேர்தலிலாவது சென்னை உள்ளிட்ட பெருநகர் பகுதிகளில் வாக்குப்பதிவை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்வது காலத்தின் கட்டாயமாகத் தோன்று கிறது.குறைந்த வாக்குப்பதிவுஇணையவழிப் பிரச்சாரம்Social media campaignசட்டப்பேரவைத் தேர்தல்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x