

கோயில்களில் நடக்கும் திருமணவிழாக்களுக்கு 10 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது. நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும்என்று இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்து சமயஅறநிலையத் துறை சார்பில் அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா பரவலை தடுக்கும் நோக்கத்துடனும் பக்தர்கள் நலன் கருதியும் கோயில் நிர்வாகத்தால் எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டு நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை தவறாது கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு கோயில்களில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு சனிக்கிழமை (இன்று) முதல் தடை விதிக்கப்படுகிறது. கோயில்களில் பொதுமக்கள் வழிபாடு இரவு 8 மணிவரை அனுமதிக்கப்படும்.
எனினும், கோயிலில் அத்தியாவசிய பூஜைகளில் அந்தந்த கோயில் ஊழியர்கள் மட்டுமேஅனுமதிக்கப்படுவர். திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.
ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும். திருமண விழாக்களுக்கு 10 நபர்களுக்குமேல் அனுமதிக்க கூடாது.
கோயில்களில் உள்ள திருமண மண்டபத்தில் அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும். ஒரே நேரத்தில் 50 நபர்களுக்கு மேற்படாமல் அனுமதித்து சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.