குறைந்த வாடகையில் நெல் அறுவடை இயந்திரம்: அரசு வழங்க ஆனைமலை விவசாயிகள் எதிர்பார்ப்பு

ஆனைமலை அடுத்த ரமணமுதலிபுதூர் பகுதியில் இயந்திரம் மூலம் நடைபெறும் நெல் அறுவடைப் பணி.
ஆனைமலை அடுத்த ரமணமுதலிபுதூர் பகுதியில் இயந்திரம் மூலம் நடைபெறும் நெல் அறுவடைப் பணி.
Updated on
1 min read

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையிலிருந்து, பழைய ஆயக்கட்டு பாசன திட்டத்துக்கு வழங்கப்படும் நீரைப் பயன்படுத்தி, ஆனைமலை கரவெளி பகுதியில் ஆண்டுக்கு இரு போகம் நெல் சாகுபடி நடக்கிறது. இரண்டாம் போக சாகுபடிக்காக, கடந்த நவம்பர் மாதம் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி, ஆனைமலை, பெத்தநாயக்கனூர், ரமணமுதலிபுதூர் பகுதிகளில் சுமார் 1100 ஏக்கரில் கோ-53, ஏஎஸ்டி- 16, ஏடிடி -53 மற்றும் ஏஎஸ்டி – 36 ரகங்களை சேர்ந்த சன்ன ரகம் மற்றும் மோட்டா ரக நெல் சாகுபடி செய்யப்பட்டது. 110 நாட்கள் சாகுபடி காலம் கொண்ட இந்த நெல் ரகங்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன.

ஆனைமலை பகுதியில் நெல் அறுவடைப் பணி சில தினங்களுக்கு முன் தொடங்கியது. அறுவடை செய்யும் நெல்லை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். இந்நிலையில், வேளாண் பொறியியல் துறை சார்பில், விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் நெல் அறுவடை இயந்திரம் வழங்க வேண்டும், அத்துடன் நெல் கொள்முதல் விலையையும் அரசு உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி பட்டீஸ்வரன் கூறும்போது, ‘‘கடந்த சில ஆண்டுகளாக, ஆனைமலை பகுதிக்கு வேளாண் பொறியியல் துறை சார்பில், நெல் அறுவடை இயந்திரம் வழங்கப்படுவதில்லை. தனியார் இயந்திரங்களை அதிக வாடகை கொடுத்து பயன்படுத்தி, விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர்.

இயந்திரம் மூலம் அறுவடை செய்தால், வைக்கோல் தனியாக கிடைப்பதுடன், மிக விரைவாக அறுவடை செய்ய முடியும், வைக்கோலை தனியாக விற்பனை செய்ய முடியும். இதனால், பலரும் இவ்வகை இயந்திரத்தை தனியாரிடம், ஒரு மணி நேரத்துக்கு, ரூ.2300 வரை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த இயந்திரம் டெல்டா மாவட்ட பகுதிகளில் வேளாண் பொறியியல் துறை சார்பில் ஒரு மணி நேரத்துக்கு 350 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை வாடகைக்கு விடப்படுகிறது.

தனியாரிடம் அதிக வாடகை கொடுத்து எடுப்பதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. மேலும் அரசு தற்போது, சன்னரக நெல் கிலோவுக்கு ரூ.19.05, மோட்டா ரக நெல் ரூ.18.65 என விலை நிர்ணயித்துள்ளது. குறைந்தபட்சம் கிலோவுக்கு ரூ.25 வழங்கினால் மட்டுமே விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படும். எனவே, குறைந்த வாடகையில் அறுவடை இயந்திரம் வழங்கி, கொள்முதல் விலையையும் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in