

கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜிசிடி கல்லூரி வளாகத்தில் ‘வாட்ச் டவர்’ அமைத்து போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி நடந்தது. இதற்காக, 6,885 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 5,316 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 5,894 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதற்கான பெட்டியில் வைத்து சீலிடப்பட்டன. பின்னர், மேற்கண்ட இயந்திரங்கள் அனைத்தும் தடாகம் சாலையில் உள்ள, வாக்கு எண்ணிக்கை மையமான, அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் (ஜிசிடி) ஏற்படுத்தப்பட்டுள்ள 10 காப்பு அறைகளில் வைத்து, அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ம் தேதி வரை, வாக்குப்பதிவு இயந்திரங்கள் காப்பு அறைகளில் தான் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். இதனால், ஜிசிடி கல்லூரி வளாகத்தில் காவல்துறையினர், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் என 310 பேர், மூன்று ஷிப்ட் அடிப்படையில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதியில் 150 கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து, காவல்துறையினர் மெகா திரை மூலமும் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் உயரமான வாட்ச் டவர்களை காவல்துறையினர் அமைத்துள்ளனர். தரையில் இருந்து குறிப்பிட்ட அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள, இந்த வாட்ச் டவர் மீது ஏறி காவல்துறையினர், பைனாக்குலர் மூலம் கண்காணித்து வருகின்றனர். தொலைதூரத்தை முழுமையாக கண்காணிக்க இந்த டவர் பயனுள்ளதாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.