மேட்டூர் அணை திறப்பு இல்லை: குறுவை சாகுபடிக்கு தீவிர நடவடிக்கை - முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மேட்டூர் அணை திறப்பு இல்லை: குறுவை சாகுபடிக்கு தீவிர நடவடிக்கை - முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
Updated on
2 min read

மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால் ஜூன் 12-ம் தேதி அணையை திறந்து விட இயலாது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். எனினும், குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் மும்முனை மின்சாரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப் பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நடப்பாண்டில் குறுவை நெல் சாகுபடியை மேற்கொள்வது குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை எனது தலைமையில் தலைமைச் செய லகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மேட்டூர் அணையின் தற்போதைய நீர் மட்டம் குறித்தும், குறுவை சாகுபடி குறித்தும் விரிவாக விவாதிக்கப் பட்டது.

போதிய நீர் இல்லை

மேட்டூர் அணையில் தற் போது 41.28 அடி மட்டுமே நீர் உள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி 10.16 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் தமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் தர வேண்டும். 10 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்தாலும் மேட்டூர் அணையில் 51.28 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருக்கும். இந்தத் தண்ணீரை வைத்துக் கொண்டு, குறுவை சாகு படிக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையை திறந்துவிட இயலாது.

கூடுதல் மழை

கடந்த ஆண்டு 19 விழுக்காடு அளவுக்கு மழை குறைவாக பெய்தபோதிலும், மண்வளத்தை மேம்படுத்தியதன் மூலமும், நவீன உத்திகளை கையாண்டதன் மூலமும், தேவையான விதை, நுண்ணூட்டச் சத்து, உரங்கள் ஆகியவற்றை உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு அளித்ததன் மூலமும், இதுவரை இல்லாத சாதனை அளவாக 103.38 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உணவு தானிய உற்பத்தி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப் பாண்டில், இதுவரை பெய்ய வேண்டிய மழை அளவான 161.8 மில்லி மீட்டருக்குப் பதிலாக 174.2 மில்லி மீட்டர் மழை கூடுதலான அளவில் பெய்துள்ளது.

மும்முனை மின்சாரம்

தற்போதுள்ள சூழ்நிலையில் குறுவை சாகுபடியை ஊக்கு விக்கும் வகையில், கீழ்காணும் நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். இதன் படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கியது போல், இந்த ஆண்டும் விவசாயத்திற்கு 12 மணி நேர தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்குவது உறுதி செய்யப்படும்.

நீர் ஆதாரங்களிலிருந்து வயலுக்கு நீர் வீணாகாமல் கொண்டு செல்ல உதவும் வகையில், ஒவ்வொருவருக்கும் 600 அடி எச்.டி.பி.இ. குழாய்கள் 7000 விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படும்.

100 விழுக்காடு மானியத்தில் சமுதாய நாற்றங்கால் முன்னரே அமைத்து, வாய்க்கால்களில் நீர் பெறப்படும் சமயத்தில் நடவுப்பணி மேற்கொள்ள ஏதுவாக நெல் நாற்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

குறுவை சாகுபடி மேற் கொண்டுள்ள பகுதிகளில் உயரிய தொழில் நுட்பங்கள் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், உயர் மகசூல் தரும் இடுபொருட்களான நெல் நுண்ணூட்டக் கலவை, துத்தநாக சல்பேட் ஆகியவை தலா ஒரு லட்சம் ஏக்கர் பரப்பிளவிற்கு 100 விழுக்காடு மானியத்தில் வழங் கப்படும்.

மேற்காணும் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் அரசுக்கு ரூ.32.95 கோடி செலவு ஏற்படும். இந்த நடவடிக்கைகளால் டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் மூலம் விவசாயிகள் கூடுதல் பரப்பில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளவும், உயர் மகசூல் பெறவும் வழிவகை ஏற்படும்.

இந்தக் கூட்டத்தில் நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச் சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in