

மருத்துவ சிகிச்சை பெற்ற போலீஸாருக்கு காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உதவித் தொகை வழங்கினார்.
சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் போலீஸார், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயர் மருத்துவ சிகிச்சை அல்லது மருத்துவ சிகிச்சை பெற்றால் அவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு செலவழித்த தொகை பரிசீலனைக்குப் பின்னர் தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து அளிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் மருத்துவ சிகிச்சை பெற்று, மருத்துவ உதவி தொகைக்குவிண்ணப்பித்திருந்த 11 போலீஸாருக்கு மருத்துவ உதவித் தொகைக்கான ரூ.19 லட்சத்து 92,228-க்கானகாசோலைகளை சென்னை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று வழங்கினார்.
மேலும், போலீஸாரின் பிள்ளைகளில் 2019-2020 கல்வி ஆண்டில் பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று, தற்போது கல்லூரியில் பயின்று வரும் 6 மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கும் கல்விஉதவித் தொகைக்கான ரூ.1 லட்சத்து 31,520-க்கான காசோலையை ஆணையர் வழங்கினார்.
வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காவல் இணை ஆணையர் (தலைமையிடம்) எஸ்.மல்லிகா, துணை ஆணையர்கள் பெரோஸ்கான் அப்துல்லா (நிர்வாகம்), அதிவீரபாண்டியன் (தலைமையிடம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.