

காஞ்சிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மருத்துவக் கழிவுகள், முறையான விதிமுறைகளை பயன்படுத்தி அழிக்கப்படாமல் குப்பை கிடங்கில் கொட்டி வைக்கப்பட்டிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது சிரஞ்சிகள், பஞ்சு, கையுறைகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி முடித்த பின்பு மருத்துவக் கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன.
இந்த மருத்துவக் கழிவுகளை அதற்கான ஒப்பந்த நிறுவனங்களில் கொடுத்து எரித்து அழிக்க வேண்டும். காஞ்சிபுரத்தில் சில தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மருத்துவக் கழிவுகள் நகராட்சி மூலம் சேகரிக்கப்படும் குப்பையில் சேர்க்கப்பட்டு நத்தப்பேட்டையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.
ஒரு பக்கம் குப்பைக் கிடங்கில் இருந்து குப்பையை தரம் பிரித்து உரமாக்கும் செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் மருத்துவக் கழிவுகள் சேர்ந்த குப்பை கொட்டப்படுகிறது. இந்த குப்பையை கையாள்பவர்களுக்கு கரோனா உள்ளிட்ட நோய் பரவும் ஆபத்து உள்ளது. இதுபோல் நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளில் ஊசி மருந்து பாட்டில்கள், கையுறைகள், முகக்கவசங்கள் உள்ளிட்டவை உள்ளன.
ஏற்கெனவே கரோனா தொற்று பரவி வரும் நிலையில் முகக்கவசம் அணிவது குறித்து அனைவரையும் நகராட்சி நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. பல்வேறு இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் மருத்துவக் கழிவுகளை எவ்வாறு இதுபோல் பொதுக் குப்பைகளோடு சேர்த்து கொட்டுகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், பொது குப்பைத் தொட்டிகளில் தனியார் மருத்துவமனைகள் மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் அவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் மகேஸ்வரியிடம் கேட்டபோது, “நான் கடந்த 2 நாட்களாக விடுப்பில் உள்ளேன். மருத்துவக் கழிவுகளை பொதுக் குப்பையோடு சேர்த்து கொட்டுவதில்லை. அவை எவ்வாறு வந்தன? அது காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வேறு யாரேனும் கொட்டியுள்ளனரா? என்பது குறித்து சுகாதாரப் பிரிவு அதிகாரிகளை நேரில் சென்று ஆய்வு செய்யும்படி வலியுறுத்தி உள்ளேன்” என்றார்.