

வெள்ளம் பாதித்த பகுதிகளில், வீடு வீடாக இலவசமாக புதிய வாக்காளர் அட்டை வழங்கப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று கூறியதாவது:
சென்னை உள்ளிட்ட மாவட்டங் களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும். வெள்ள பாதிப்பு பகுதிகள் ஏற்கனவே தெரியும் என்பதால், பொதுமக்கள் விண்ணப்பிக்க வேண்டியதில்லை. வெள்ளம் பாதித்த பகுதிகள் எங்களுக்கு தெரியும் என்ப தால் அவர்களுக்கு நாங்களே வாக்காளர் அடையாள அட் டையை தயாரித்து இலவசமாக வீட்டிற்கே சென்று வழங்க முடிவெடுத்துள்ளோம்.
இது தவிர, குறுஞ்செய்தி, ஆன்லைனில் விண்ணப்பித்தாலும் அவர்கள் வீட்டிற்கே சென்று வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். குறுஞ்செய்திக் கான கைபேசி எண் விரைவில் அறிவிக்கப்படும். தற்போது வாக்காளர் பட்டியல் சரிபார்க் கும் பணிகள் வெள்ள நிவாரணப் பணிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரு தினங் களில் பணிகள் தொடங்கப்படும். பெரும்பாலான வாக்குச்சாவடி அலுவலர்கள் பள்ளி ஆசிரியர்களாக இருப்பதால், அவர்களுக்கான வாக் காளர் பட்டியல் கள ஆய்வு பணிகள் தொடரும்.
வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் போதுமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு சிறப்பாக, பிரச்சினைகள் இல்லாமல் நடத்தி முடிக்கப்படும். கல்லூரி மாணவர் களுக்கு ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் தகவல்கள் பரிமாறப்படும்.
பள்ளித் தேர்வுகள் முடிந்த பின்தான் வழக்கமாக தேர்தல் நடத்தப்படும். ஆசிரியர்களுக்கு தேர்தல் தொடர்பாக 3 நாட்கள் பயிற்சி, 2 நாட்கள் தேர்தல் பணி. எனவே, மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலை யில், ஆசிரியர்களை தேர்தல் பணிக்கு பயன்படுத்துவதில் பாதிப்பு ஏற்படாது.
திமுக சார்பில், வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர்கள் முகவரி, வீட்டு எண்ணுடன் அளிக்க வேண்டும். நீக்கப்பட்டதற்கான காரணம், முகவரி மாறியவர்களின் பழைய முகவரி ஆகியவை கேட்கப்பட்டன. உயர் நீதி மன்றமும் உத்தரவிட்டதால், அந்த விவரங்களை அளிக்க, சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திமுகவுக் கும் இது தொடர்பாக தெரிவிக் கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.