குடிநீருக்காக ஏங்கும் புக்குளம் கிராம மக்கள்: 6 மாதங்களுக்கு ஒரு முறை விநியோகம் என புகார்

குடிநீருக்காக ஏங்கும் புக்குளம் கிராம மக்கள்: 6 மாதங்களுக்கு ஒரு முறை விநியோகம் என புகார்
Updated on
2 min read

உடுமலையை அடுத்த புக்குளம் கிராம மக்களுக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகிக்கப்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

உடுமலை அருகே உள்ள புக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அறிவெளி ஆறுமுகம் ‘தி இந்து’ ‘உங்கள் குரல்’ பகுதியில் கூறியிருந்ததாவது: எங்கள் கிராமத்துக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே இப்பிரச்சினை இருந்து வருகிறது என்றார்.

திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட புக்குளம் தனி ஊராட்சியாக உள்ளது. 2,000-த்துக்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 5,000-த்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு மேல்நிலைத் தொட்டி, 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 7 தொட்டிகள் மூலம், 350 வீட்டு இணைப்புகள் மற்றும் தெருக்குழாய்கள் வழியே குடிநீர் விநியோகிக்கப்படுகின்றன. பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் பயன்பெறும் கடைக்கோடி கிராமமாகும்.

அந்த கிராம மக்கள் கூறும்போது, ‘பல வருடங்களாக குடிநீர் கிடைப்பதில்லை. உப்பு தண்ணீர் கூட 20 நாளுக்கு ஒரு முறை தான் கிடைக்குது. எப்போதாவது வரும் குடிநீரிலும் புழுக்கள், பூச்சிகள் நெளிவது கொடுமையிலும் கொடு மையா இருக்கு. அதுவும் 4 குடம் மட்டுமே கிடைக்கும். வேறு வழியில் லாமல் ஒரு சிலர் விலைக்கு வாங்கியும், சிலர் உடுமலைக்கு சென்று கேன்களில் கொண்டு வந்தும் குடிக்கின்றனர்’ என்றனர்.

ஊராட்சித் தலைவர் திருமனிடம் கேட்டபோது, ‘வாராவாரம் பிடிஓ.விடம் புகார் தெரிவித்துக் கொண்டு தான் இருகிறோம். ஊராட்சியிலே தீர்மானம் கூட நிறைவேற்றியுள்ளோம். எங்களால் வேறு என்ன செய்ய முடியும். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும்’ என்றார்.

ஒன்றிய ஆணையர் செல்வராஜ் கூறும்போது, ‘புக்குளம் கிராமத்துக்கு மாதக் கணக்கில் குடிநீர்த் தட்டுப்பாடு உள்ளது என்பது தெரியாது. இருப்பினும் இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

‘உயரமான பகுதி’

அம்பராம்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் உதவி பொறியாளர் தாமரைச்செல்வன் கூறும்போது, ‘74 ஊராட்சிகளில் உள்ள 295 குடியிருப்புகளுக்கு நாள் தோறும் 240 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அனுப்பர்பாளையம் நீரேற்று நிலையத்தில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ள புக்குளம் கிராமத்துக்கு குடிநீர் செல்கிறது. பூகோளரீதியாக மிக உயரமான பகுதியாக இருப்பதால் அங்கு குடிநீர் கொண்டு செல்வது கடினம். இடையிடையே ஏற்படும் மின் தடை, குழாய் உடைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. திருமூர்த்திமலை புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தில் புக்குளம் இடம்பெற்றுள்ளதால் விரைவில் அதற்கு நல்ல தீர்வு கிடைக்கும்’ என்றார்.

அருகில் உள்ள குறிஞ்சேரிக்கு திருமூர்த்தி குடிநீர் கிடைக்கிறது. அம்பராம்பாளையம் திட்டத்தில் சேர்க்கப்பட்ட காரணத்தாலேயே திருமூர்த்தி பெறும் வாய்ப்பு புக்குளத்துக்கு பறிபோனதாக கூறப்படுகிறது. எனினும் அத்தியாவசிய தேவை கருதி உடனடி குடிநீர் விநியோகம் வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in