Published : 10 Apr 2021 03:14 AM
Last Updated : 10 Apr 2021 03:14 AM

கிராமங்களில் அமோக வாக்குப்பதிவு - திருமங்கலத்தில் எந்த கட்சிக்கு சாதகமாக இருக்கும்?

திருமங்கலம் தொகுதி நகர் பகுதியில் 50%, கிராமத்தில் 95% வாக்குகள் பதிவாகியுள்ளதால் வெற்றியைக் கணிக்க முடியாமல் கட்சியினரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திமுக சார்பில் எம்.மணிமாறன், அமமுக சார்பில் ஆதிநாராயணன் உள்ளிட்ட 25 பேர் போட்டியிட்டனர். மொத்தம் உள்ள 2,77,803 வாக்குகளில் 2,17,014 வாக்குகள் பதிவானது. கடும் போட்டி நிலவிய இத்தொகுதியில் வெற்றி பெறப்போவது யார் என்ற விவாதம் நடந்து வருகிறது.

இந்நிலையில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் தங்களுக்கு ஆதரவான பகுதி என திட்டமிட்டு தேர்தல் பணியாற்றினர். வாக்குப்பதிவுக்கு பின் வெற்றி வாய்ப்பு குறி்த்து நிர்வாகிகளுடன் வேட்பாளர்கள் ஆலோசித்து வருகின்றனர். தொகுதியில் சராசரியாக 78.12% வாக்குகள் பதிவானாலும் இது பரவலாக இல்லை. திருமங்கலம் நகரில் 50.63% என்ற குறைந்த அளவிலும் கிராமத்தில் 95.07% என உச்சபட்சமாகவும் பதிவாகியுள்ளது.

திருமங்கலம் நகரில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் 50 முதல் 60% என்ற அளவிலேயே வாக்குகள் பதிவாகின. அதேநேரம் கிராமங்களில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் 80% மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதிலும் கள்ளிக்குடி, கல்லுப்பட்டி, திருமங்கலம் ஒன்றியங்களில் எவ்வளவு சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என அதிமுக, திமுக வேட்பாளர்கள் கணக்கிட்டு வருகின்றனர். எனினும் திருமங்கலம் நகர் பகுதியில் வாக்குகள் குறைவாகப் பதிவானது தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஒரு கட்சியினர் கருதுகின்றனர்.

கிராமங்களில் கூடுதல் வாக்குகள் பதிவாகியுள்ளதும், கள்ளிக்குடி ஒன்றியத்தில் அதிகமாக வாக்குப் பதிவு நடந்துள்ளது தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என மற்றொரு கட்சியினர் கருதுகின்றனர்.

திருமங்கலம் தொகுதியில் 90% மேல் மற்றும் 55%-க்கும் கீழ் வாக்குப்பதிவு நடந்துள்ள வாக்குச்சாவடிகள் விவரத்தை தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

இதன் விவரம்: வாக்குச்சாடி எண் 17 மீனாட்சிபுரம்-93.79%, 19 எம் கரடிக்கல் 92.67%, 20ஏ எம் கரடிக்கல்-90.31, எஸ்.வெள்ளாகுளம் வாக்குச்சாவடி எண் 177-ல் 90.12%, 178-ல் 91.42%, இலுப்பகுளம் 179 எம்மில் 90.71%, 179ஏடபிள்யூவில் -90.81%, 185ஏ டிபிள்யூ குராயூரில்-91.99%, 310 எம் பேய்க்குளத்தில் -93.03%, 209 டி.குண்ணத்தூரில் 91.26%, 210 எண் வாக்குச்சாவடி ரெங்கபாளையத்தில் 90.27%, தாதங்குளத்தில் 91.52%,வாக்குச்சாவடி எண் 226 கிளாங்குளத்தில் 95.07% என அதிகபட்சமாக வாக்குகள் பதிவாகியுள்ள சில வாக்குச்சாவடிகள். கிளாங்குளத்தில்தான் தொகுதியிலேயே அதிக சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இங்கு 649 வாக்காளர்களில் 617 பேர் வாக்களித்துள்ளனர்.

தொகுதியிலேயே மிக குறைந்த சதவீதமாக திருமங்கலம் அல்அமீன் பள்ளி வாக்குச்சாவடி எண் 68-ல் 50.63% பதிவாகியுள்ளது.. இங்கு மொத்தம் 640 வாக்காளர்கள் இருந்தும் 324 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

மேலும் திருமங்கலம் நகர் பீகேஎன் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி எண் 59-ல் 52.33%, பிகேஎன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாடி எண் 62-ல் -53.70%, 64-ல் 52.35% என குறைந்த அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நகராட்சியில் 55% முதல் 65%-க்குள்ளேயே 80 சதவீத வாக்குச்சாவடிகளில் வாக்குகள் பதிவாகியுள்ளன.

90%-க்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ள வாக்குச்சாவடிகள் குறித்து தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x