

கிராம சட்ட பாதுகாப்பு மற்றும் ஆதரவு மையத்தில் கொடுக்கப் படும் மக்களின் மனுக்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு காண ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி கூறினார்.
மாற்றுமுறை தீர்வு மையம் மற்றும் கிராம சட்ட பாதுகாப்பு மற்றும் ஆதரவு மையம் திறப்பு விழா, திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிபதி சி.ராகவன் வரவேற்றார். புதிய மையங்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னி ஹோத்ரி தலைமையேற்று திறந்து வைத்தார்.
பின்னர், வேங்கிக்காலில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் அவர் பேசுகையில், “நீதிமன்றங்கள் வழக்குகளால் மிதக்கிறது. மாற்றுமுறை தீர்வு மையத்தால் நிறைய வழக்குகளுக்கு சமரசம் ஏற்படும். விபத்து வழக்குகள், நிறுவனம் தொடர்பான வழக்குகள், சில குற்ற வழக்குகள் ஆகியவை முடிவுக்கு வரும். அவ்வாறு வராதபட்சத்தில் நீதிமன்றத்தை நாடலாம். மாற்றுமுறை தீர்வு மையம், வழக்கறிஞர்களுக்கும் பலன் கொடுக்கும். சமுதாய பணியில் ஈடுபட்டுள்ள அவர்கள், மக்களின் துன்பங்களை குறைக்க உதவ வேண்டும்.
தி.மலை வேங்கிகாலில் தொடங்கப்பட்டுள்ளது 1001-வது மையம். சட்ட பாதிப்புகளுக்கு மட்டுமின்றி வாழ்க்கையில் தரமான உணவு, உடை, கல்வி போன்றவை கிடைக்கவில்லை என்றாலும் இந்த மையத்தை நாடலாம்.
அனைத்து திட்டங்களுக்கும் விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வழிகாட்டப்படும். மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் குறித்த விவரங்களை மாவட்டம் மற்றும் வட்ட அளவிலான கிராம சட்ட பாதுகாப்பு மையங்களில் உள்ள அறிவிப்பு பலகையில் வெளியிட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மையத்தில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது ஒரு மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுக்கும் ஆட்சியர், தெரிவிக்க வேண்டும்” என்றார்.