நெல்லை மாவட்டத்தில் வாழைத்தார் அறுவடை தீவிரம்: போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை

திருநெல்வேலி அருகே பிராஞ்சேரியில் அறுவடை செய்யப்பட்ட வாழைத்தார்களை விற்பனைக்கு அனுப்ப தலைச்சுமையாக கொண்டு செல்லும் பெண் தொழிலாளர்கள். படம்: மு.லெட்சுமிஅருண்
திருநெல்வேலி அருகே பிராஞ்சேரியில் அறுவடை செய்யப்பட்ட வாழைத்தார்களை விற்பனைக்கு அனுப்ப தலைச்சுமையாக கொண்டு செல்லும் பெண் தொழிலாளர்கள். படம்: மு.லெட்சுமிஅருண்
Updated on
2 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது வாழைத்தார் அறுவடை முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முழுக்க கேரள வியாபாரிகளை நம்பியே இங்கு வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்ததாக பணப்பயிரான வாழை பயிரிடப்படுகிறது. மாவட்டத்தில் களக்காடு வட்டாரத்தில் அதிகளவில் இதை பயிடுகிறார்கள். பலத்த மழையுடன் சூறைக்காற்று உள்ளிட்ட இயற்கை பேரிடர்களையும் தாண்டி பயிரிடப்பட்ட 11 மாதங்களில் வாழைகள் அறுவடைக்கு தயாராகிவிடுகின்றன.

வாழைத்தார் அறுவடை தீவிரம்

இங்கு அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள் பெரும்பாலும் கேரளா வுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள வியாபாரிகள் களக்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வந்து தோட்டங்களையும், அவற்றில் விளைந்துள்ள காய்களின் தரத்தையும் பார்த்து விலைநிர்ணயம் செய்து வாழைத்தார்களை மொத்தமாக வெட்டி எடுத்து கனரக வாகனங்களில் கேரளா கொண்டு செல்கிறார்கள்.

இவ்வாறு கேரளாவுக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படும் ஏத்தன் வாழைத்தார்களில் இருந்து சிப்ஸ் தயாரிக்கப்பட்டு அரபு நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. தற்போது ஏத்தன், ரசகதலி, நாட்டுகதலி போன்ற ரகங்கள் திருநெல்வேலியை சுற்றியுள்ள பிராஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டு, தற்போது அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகள் அச்சம்

கடந்த ஆண்டு கரோனா காலத்தில் வாழை சாகுபடி மற்றும் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. கேரளாவுக்கு வாழைத்தார்களை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்தனர். இம்முறை வாழைத்தார் அறுவடை தொடங்கியுள்ள நிலையில் மறுபடியும் கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு விடுமோ என்ற அச்சம் வாழை விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் கேரளாவுக்கு வாழைத்தார்களை ஏற்றிச் செல்ல முடியாமல் பெரும் இழப்பு ஏற்படும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.

பிராஞ்சேரியை சேர்ந்த வாழை விவசாயி ரமேஷ் கூறியதாவது:

கேரள சந்தையை நம்பியே திருநெல்வேலி மாவட்டத்தில் வாழை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. அங்குள்ளவர்கள் வாழைத்தார்களை கொள்முதல் செய்யவில்லை என்றால் இங்குள்ள விவசாயிகளுக்கு பெருத்த இழப்பு ஏற்படும். கேரள மக்கள் வாழைப்பழத்தை முக்கிய உணவாக உட்கொள்கின்றனர். மேலும் ஏத்தன் வாழைக்காயை பவுடக்கி ஏற்றுமதி செய்யும் ஆலைகளையும் அங்கு உருவாக்கியுள்ளனர்.

நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் வாழைத்தார்களை கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். தமிழகத்தில் வாழைப் பழத்தின் தேவையை மக்கள் இன்னும் உணரவில்லை. சத்துணவில் வாழைப்பழத்தை கொடுத்தால் அதிகளவில் வாழைப்பழம் கொள்முதல் செய்யப்படும்.

இதனால் வாழை விவசாயிகளுக்கும் வாழ்வாதாரம் கிடைக்கும். இப்பகுதியில் வாழைத்தார் கொள்முதல் நிலையத்தை அரசு அமைக்க வேண்டும். தற்போது பிராஞ்சேரி வட்டாரத்தில் 350 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த ரசக்கதலி வாழைத்தார்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கிலோ ரூ.19 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் பெரிய அளவுக்கு லாபம் இல்லை. செலவிட்ட தொகை மட்டுமே கிடைக்கும் என்று தெரிவித்தார்.

உரங்கள் விலை உயர்வு

டிஏபி உரம், யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஒரு வாழையை அறுவடைக்கு தயார்படுத்தும் வகையில் வளர்க்க உரத்துக்காக மட்டும் ரூ.100 வரை செலவிட வேண்டியுள்ளது.

வாழை காற்றில் சாய்ந்துவிடாமல் இருக்க சவுக்கு கம்பு நடுவது அவசியம். கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை ரூ.40-க்கு விற்கப்பட்ட சவுக்கு கம்பு தற்போது ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை நடுவதற்கு கூலி கொடுக்க வேண்டும். இவ்வாறு அடிப்படை செலவாக ஒரு வாழைக்கு ரூ.200 வரையில் விவசாயிகள் செலவிட்டுள்ளனர்.

வாழைத்தார் அறுவடை தொடங் கியிருக்கும் நிலையில் திடீரென்று மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டால் பெரும் இழப்பு ஏற்படும் என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in