

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் வரும் 15-ம் தேதி அமலுக்கு வரும்நிலையில், தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் போதுமான மீன்பாடு இல்லாததால் கடந்த 1-ம் தேதி முதலே கடலுக்கு செல்வதை நிறுத்திவிட்டனர். இதனால் மீன்கள் விலை அதிகரித்துள்ளது.
மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும் தமிழகத்தின் கிழக்குகடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல்ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள்மீன்பிடி தடைக்காலமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டும் தடைக்காலம் வரும் 15-ம் தேதி தொடங்க உள்ளது.
ஆட்சியர் அறிவிப்பு
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “திருவள்ளூர் மாவட்டம்முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி நகரம் வரை ஒவ்வொரு ஆண்டும் 61 நாட்கள், அதாவது ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ம் தேதி வரை விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு, அரசாணை வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த காலத்தில் தூத்துக்குடி மாவட்டவிசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தருவைகுளம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து420 விசைப்படகுகள் கடலுக்குச் சென்று வருகின்றன. இந்த விசைப்படகுகள் வரும் 15-ம் தேதி முதல் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடலுக்கு செல்லவில்லை
மீன்பிடி தடைக்காலம் வரும் 15-ம் தேதி தான் அமலுக்கு வருகிறது என்றாலும், தூத்துக்குடியில் கடந்த1-ம் தேதியில் இருந்தே விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தற்போது கடலில் மீன்பாடு மிகவும் குறைவாக உள்ளது. கிடைக்கக்கூடிய மீன்கள்டீசல் மற்றும் பராமரிப்பு செலவுக்கே போதுமானதாக இல்லை.இதனால் விசைப்படகு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. மீனவர்களுக்கும் போதுமான வருமானம் கிடைப்பதில்லை. எனவே, விசைப்படகுகள் கடந்த1-ம் தேதியில் இருந்தே கடலுக்குசெல்லவில்லை.
மீன்பிடி சார்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மீன்கள் வரத்து குறைந்து, விலை உயர்ந் துள்ளது.
விலை மேலும் உயரும்
இதுகுறித்து பக்ரூதீன் என்ற மீன் வியாபாரி கூறும்போது, “தூத்துக்குடியில் மீன்களின் வரத்து குறைந்திருப்பதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தருவைகுளம் கடற்கரையில் நேற்று கருப்பு கலிங்கன் முரள் கிலோ ரூ.300, வாளை முரள் ரூ.250, பச்சை முரள் ரூ.370, கட்ட முரள் ரூ.350, வெளமீன் ரூ.200, ஊளி ரூ.400, சீலா ரூ.700, பாறை ரூ.350 என விலைபோனது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் அனைத்து மீன்களும் கிலோவுக்கு ரூ.100 வரை விலை அதிகரித்துள்ளது. மீன்பிடி தடைக்காலம் தொடங்க இருப்பதால் மீன்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது” என்றார் அவர்.