மானாமதுரை சித்திரைத் திருவிழா நிறுத்தம்: ராட்டினத் தொழிலாளர்கள், நாடகக் கலைஞர்கள் பாதிப்பு

ராட்டினம் சாதனங்கள் | கோப்புப் படம்.
ராட்டினம் சாதனங்கள் | கோப்புப் படம்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சித்திரைத் திருவிழா நிறுத்தப்பட்டதால் ராட்டினத் தொழிலாளர்கள், நாடகக் கலைஞர்கள் என சுமார் 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரைக்கு அடுத்தபடியாக மானாமதுரையில் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படும். இந்த விழா மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயில், வீரழகர் கோயிலில் நடக்கும். மேலும், திருவிழா நடக்கும் நாட்களில் வைகை ஆற்றில் ராட்டினம், ஆங்காங்கே மண்டக படிதாரர்கள் சார்பில் நாடகம், கலை நிகழ்ச்சிகள் என விழா நாட்கள் களைகட்டும்.

கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் சித்திரைத் திருவிழா நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு திருவிழா நடக்கும் என்ற நம்பிக்கையில் கோயில் நிர்வாகம் சார்பில் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்நிலையில் ஏப்.10-ம் தேதி முதல் கரோனா தொற்றால் பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அதில் கோயில் விழாக்களுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மானாமதுரை சித்திரைத் திருவிழா 2-வது ஆண்டாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ராட்டினத் தொழிலாளர்கள், நாடகக் கலைஞர்கள், கலை நிகழ்ச்சிகளை நடத்துவோர் என 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மானாமதுரை ராட்டினத் தொழிலாளர்கள் கூறுகையில், ''ஏற்கெனவே கடந்த ஆண்டு முழுவதும் கோயில் விழாக்கள் நடைபெறாமல் இருந்ததால் நாங்கள் உணவிற்கே திண்டாடினோம். கடன்களையும் அடைக்க முடியவில்லை. அதேபோல் இந்த ஆண்டும் விழாவுக்குத் தடை விதித்துள்ளதால் எங்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் கட்டுப்பாடுகளுடன் திருவிழா, கலை நிகழ்ச்சிகளை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்'' என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in