Published : 09 Apr 2021 06:12 PM
Last Updated : 09 Apr 2021 06:12 PM

45 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100% தடுப்பூசி; ஏப்ரல் 14-16 வரை தடுப்பூசி திருவிழா: தமிழக அரசு முடிவு

கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்தும் விதமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100% தடுப்பூசி போடும் முடிவைத் தமிழக அரசு எடுத்துள்ளது. இதற்காக ஏப்ரல் 14 முதல் 16 வரை மாவட்டந்தோறும் தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது. இது தவிர மாவட்ட வாரியாக தனியாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“ஏப்ரல் 8 (நேற்று) வரை, 4,58,969 சுகாதாரப் பணியாளர்கள், 5,61,531 முன்களப் பணியாளர்கள், 45 வயது முதல் 59 வயதிற்குட்பட்ட இணை நோய் உள்ள 9,21,050 நபர்கள், 45-59 வயதிற்குட்பட்ட இணை நோய் இல்லாத 70,216 நபர்கள், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 11,14,270 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இரண்டாம் தவணை தடுப்பூசி 2,12,517 சுகாதாரப் பணியாளர்கள், 81,685 முன்களப் பணியாளர்கள், 45 வயது முதல் 59 வயதிற்குட்பட்ட இணை நோய் உள்ள 25,804 நபர்கள் 45-59 வயதிற்குட்பட்ட இணை நோய் இல்லாத 100 நபர்கள், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 40,894 நபர்களுக்குப் போடப்பட்டுள்ளது.

இதுவரை 31,26,036 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி, 3,61,000 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி என மொத்தம் 34,87,036 நபர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கரோனா நோய் குணப்படுத்தும் முறையில் இந்திய முறை மருத்துவம் ஈடுபடுத்தப்படுகிறது. பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ வல்லுநர்களோடு அடிக்கடி கலந்து ஆலோசித்து அவர்களின் அறிவுரைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தப் பணிகளை முடுக்கிவிட ஏற்கெனவே பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 15 களப்பணிக் குழுக்களும், கண்காணிப்பு அலுவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அந்தந்த மாவட்டத்தில் பதிவாகும் தொற்று எண்ணிக்கையின் அளவு, கோவிட் பராமரிப்பு மையம் தொடங்கப்பட்ட நிலை, அந்த மாவட்டத்தில் தடுப்பூசி போடும் நிலைமை, நோய் கட்டுப்பாட்டுப் பணிகள், முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுவது ஆகியவற்றை மாவட்ட ஆட்சித் தவைர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருடன் இணைந்து கண்காணிப்பார்கள்.

ஒரு காலவரையறைக்குள், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் 100 விழுக்காடு தடுப்பூசி போடும் பணியையும் முடிக்க முடிவெடுக்கப்பட்டது. குறிப்பாக 14 ஏப்ரல் 16 ஏப்ரல் வரை அந்தந்த மாவட்டத்தில் தடுப்பூசி திருவிழா என்று அறிவித்து தகுதிவாய்ந்த நபர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையும் எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது”.

இவ்வாறு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x