

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகமாகி வருவதால் வீடு வீடாகக் கண்டறிதல், தனிமைப்படுத்துதல், தடுப்பூசி என மூன்று வடிவங்களில் சென்னை மாநகராட்சி செயல்படும் எனத் தெரிவித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், 45 வயதுக்கு மேற்பட்டோர் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது:
“களப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களை உடனடியாகக் கண்டறிவார்கள். அவர்களுக்கு எங்களுடைய மருத்துவ முகாம்களில் பரிசோதனை நடத்தி, தொற்று இருந்தால் அதற்கு அடுத்த நடைமுறைகளைத் தொடங்குவோம். சிகிச்சை ஆரம்பித்தால் உயிரிழப்புகளை 99 சதவீதத்துக்கும் மேல் குறைக்கலாம். கடந்த ஆண்டு 12,000 களப்பணியாளர்களை வைத்து கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டோம்.
இந்த ஆண்டு 6,000 களப் பணியாளர்களை வைத்து ஆரம்பித்துள்ளோம். போன ஆண்டு 150 வீடுகள் வரை ஒரு நபருக்குக் கொடுத்தோம். இந்த ஆண்டு 250 வீடுகள் ஒரு நபருக்குக் கொடுத்துள்ளோம். இதில் கூடுதலாக ஆட்களைப் பயன்படுத்தவும் அனுமதி அளித்துள்ளோம்.
இதுவரை 1,15,000 காய்ச்சல் முகாம்களை அமைத்துள்ளோம். இதில் சிறப்பு என்னவென்றால் தெருவாரியாகக் கணக்கெடுக்க முடியும். தெருவாரியாக எங்களிடம் விவரம் உள்ளது. அதை ஆய்வுசெய்து எந்தத் தெருவில் தொற்று அதிகம் உள்ளது என்பதை அறிந்து மருத்துவக் குழு சென்று உரிய சிகிச்சை அளிக்க முடியும்.
இந்த ஆண்டு மத்திய தர வர்க்கத்தினர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. அதனால் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறைகள் உள்ளதால் எங்கள் சுகாதாரத்துறை அலுவலர்கள் சான்றிதழ்படி அவர்கள் அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
சிலருக்குக் குறைவான தொற்று பாதிப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறியதன் அடிப்படையில் அவர்களை வீட்டுத் தனிமையில் இருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் வெளியில் வராத அளவுக்குப் பழைய முறைகளில் கட்டுப்பாடு வரும். அதே நேரம் இதுபோன்ற வீட்டுத் தனிமையில் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்பதற்காகக் கண்காணிப்புப் பணியாளர்கள் அவர்களுக்கான வீட்டுத் தேவைகளான மளிகைப் பொருள், பால் உள்ளிட்டவற்றை அறிந்து நிறைவேற்றுவார்கள்.
இதன் மூலம் இந்த வகையாக பாதிக்கப்பட்ட மக்கள் மூலம் தொற்றுப் பரவல் பெருமளவு குறைக்கப்படும். அடுத்து கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பெரிய விஷயமாகப் பார்க்கப்படுவது, தடுப்பூசி. சென்னையைப் பொறுத்தவரை 9 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போட்டுவிட்டோம். 10 லட்சத்தை நெருங்கி வருகிறோம். இதில் இன்னும் போடவேண்டியுள்ளது.
45 வயதுக்கு மேல் உள்ள நபர்களின் எண்ணிக்கையே இன்னும் 15 லட்சத்துக்கு மேல் உள்ளது. எங்களிடம் தெருவாரியாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களின் விவரம் உள்ளது. அவர்களைக் கண்டறிந்து மத்திய அரசு கூறியுள்ளது போல் 2 தெருக்களுக்கு ஒரு தடுப்பூசி முகாம் மூலம் அவர்களுக்குத் தடுப்பூசி போட வேண்டும்.
தற்போது தேர்தல் காலமானதால் தினசரி 35,000 பேர் வரை தடுப்பூசி போட்டு வந்தது சற்று குறைந்தது. இனி வரும் காலங்களில் மீண்டும் வேகமாகக் கொண்டுவர உள்ளோம். அதன் மூலம் ஒரு நாளைக்கு 50 ஆயிரத்திலிருந்து 60 ஆயிரம் பேர் வரைக்கும் தடுப்பூசி போடப்போகிறோம். இதன் மூலம் ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்குள் 20 முதல் 25 லட்சம் பேருக்குப் போட்டுவிட முடியும். அது மிகப்பெரிய எண்ணிக்கை.
ஏன் 45 வயதுக்கு மேற்பட்டோர் என்று சொல்கிறோம் என்றால் அவர்களுக்குத்தான் தொற்று தாக்கப்படக்கூடிய வாய்ப்பு அதிகம். இளம் வயதினருக்கு அந்தப் பிரச்சினை இல்லை. அதைத்தான் வல்லுநர்கள் சொல்கிறார்கள். அதனால்தான் 45 வயதுக்கு மேற்பட்டோரை குறிக்கோளாக வைத்துள்ளோம்.
அதன்பின்னர் இரண்டாவது தவணை போடுவோம். இதனால் பாதுகாப்பு வளையம் பெரிதாகிக் கொண்டே செல்லும். அப்போதுதான் பரவுவது குறையும். அதன் பின்னர் வெளியிலிருந்து பரவுவது குறையும். அதன் பின்னர் வந்தாலும் தொற்றின் தாக்கம் பெரிதாக இருக்காது.
மருத்துவமனையிலும் அனுமதிக்கும் நிலை வராது. 2 தெருக்களுக்கு ஒரு தடுப்பூசி முகாம் அமைக்கப்படும். மொத்தமாகப் பணியாற்றும் இடங்கள், பெரிய பெரிய அபார்ட்மென்ட், காம்ப்ளக்ஸ் போன்ற இடங்களில் முகாம் நடத்திப் போட உள்ளோம்.
பொதுமக்களுக்கு ஊடகம் வாயிலாக வேண்டுகோள். 45 வயதுக்கு மேற்பட்டோர் தயவுசெய்து உங்களிடம் உள்ள ஆதார் அட்டையுடன் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனை, முகாம் எதுவாக இருந்தாலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து போடுங்கள். இந்த அலை மிகப்பெரிய ஒன்றாகப் பரவிவரும் வேளையில் நாம் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும். குறைந்த அளவாக கடந்த மாதம் இருந்த கரோனா தொற்று ஒரே மாதத்தில் மிகப்பெரிய அளவில் கூடியுள்ளதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
சென்னையில் பல இடங்களில் 10 மையங்கள் மீண்டும் சில நாளில் செயல்பாட்டுக்கு வந்துவிடும். கடந்த ஆண்டு 5,500 நோய்த் தொற்றுள்ளவர்கள் இருந்தனர். ஆனால் அப்போது 22,000 படுக்கைகள் நமக்கு இருந்தன. ஆகவே படுக்கைகள், சிகிச்சை மையங்கள் குறித்த தயக்கம் வேண்டாம்”.
இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.