

அரக்கோணம் அருகே உள்ள சோகனூர் கிராமத்தில் தலித் இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து செங்கல்பட்டில் வழக்கறிஞர்கள் சார்பில் இன்று (9-ம் தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரக்கோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட சோகனூர் கிராம காலனியைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (20). செம்பேடு காலனியைச் சேர்ந்தவர் சூர்யா (25). நண்பர்களான இருவரும் அண்மையில் கௌதம நகர் பகுதியில் 10 பேர் அடங்கிய கும்பலால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டனர். மேலும், மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வழக்கில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் இந்தப் படுகொலைகளைச் செய்தவர்கள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தலித் இளைஞர்களைப் படுகொலை செய்தவர்களைக் கைது செய்ய வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், படுகாயம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும், தலித் மக்கள் மீது சாதி ரீதியாகத் தொடர்ந்து நடைபெறும் படுகொலைகளைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் இந்தப் படுகொலைகளைக் கண்டித்து நாளை மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.