

கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் மதுரையில் ஒரே நாளில் 10 இடங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டதற்கு வேதனை தெரிவித்த நீதிபதிகள், புதுக்கோட்டை கோயில் விழாவில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க மறுத்தனர்.
புதுக்கோட்டை பொன்னமராவதி ஆலவயலைச் சேர்ந்த அழகப்பன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''ஆலவயல் ஸ்ரீ வேட்டைக்காரன் சுவாமி கோயிலில் பங்குனி மாதத்தில் பழத் திருவிழா நடைபெறுவது வழக்கம். 200 ஆண்டுகளாக இத்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பழத் திருவிழா நடைபெறுகிறது. திருவிழா முடிந்து மதியம் 1 மணி முதல் 4 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறும்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மார்ச் 17-ம் தேதி மனு அளித்தோம். ஆனால், மனு நிராகரிக்கப்பட்டது. எனவே, ஆலவயல் ஸ்ரீ வேட்டைக்காரன் சுவாமி கோயிலில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், ''கரோனா பரவல் காரணமாக மதுரையில் மட்டும் ஒரே நாளில் 10 இடங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. நாளை (ஏப்ரல் 10) முதல் திருவிழாக்கள், திருமணங்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க முடியாது. கரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு மனுதாரர் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி புதிதாக மனு அளித்து நிவாரணம் பெறலாம்'' என்று கூறி மனுவை முடித்து உத்தரவிட்டனர்.