Published : 09 Apr 2021 04:31 PM
Last Updated : 09 Apr 2021 04:31 PM

ஜெயலலிதா அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு; என்னென்ன சிறப்பம்சங்கள்?

பராமரிப்புப் பணிக்காக மூடப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அருங்காட்சியகம், பொதுமக்கள் பார்வைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது உடல், மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு ரூ.79.75 கோடியில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம், அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா நினைவிடத்தை கடந்த ஜனவரி 27-ம் தேதி முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா ஆகியவற்றுக்கான பணிகள் தொடர்ந்து நடந்து வந்ததால், நினைவிடத்தைப் பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. பிப்ரவரி 2-ம் தேதி அன்று அவை மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 24-ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அவரது ஆளுயர உருவ மெழுகுச்சிலை திறந்து வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் மூடப்பட்ட ஜெயலலிதா அருங்காட்சியகம் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியகத்தின் சிறப்பம்சங்கள்

அருங்காட்சியகத்தில் அரக்கு நிறச் சேலை, ஷூ ஆகியவற்றை அணிந்த நிலையில் ஜெயலலிதாவின் மெழுகுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகச் சுவரின் ஒருபுறம் சிறுவயது முதல் முதல்வர் ஆனது வரை ஜெயலலிதாவின் ஒவ்வொரு படிநிலை குறித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. எதிர் வரிசையில், அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான படங்கள், அவற்றுக்கான விளக்கங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோல ஜெயலலிதாவின் குழந்தைப் பருவம், சினிமா, தொடக்க அரசியல் என்ற 3 தலைப்பின்கீழ், 70 விநாடிகள் ஓடும் வீடியோ, மெய்நிகர் பூங்காவில் திரையிடப்படுகிறது. அதேபோல்,‘செல்ஃபி வித் அம்மா’ என்ற பகுதியில், ஜெயலலிதா படம் தோன்றும். அதன் அருகில் நின்று கையசைத்தபின், அருகில் உள்ள தொடுதிரையில் நமது தொலைபேசி எண்ணைப் பதிவிட்டால், அந்த எண்ணுக்கு ஜெயலலிதாவுடன் எடுத்த செல்ஃபி படம் அனுப்பி வைக்கப்படும்.

மலரஞ்சலி

இதுதவிர ஜெயலலிதாவுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் வகையில் மெய்நிகர் அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், மலர்கள் மற்றும் அவற்றுக்கான நிறத்தைத் தேர்வு செய்து பதிவு செய்தால், அந்த மலர்கள் ஜெயலலிதா மீது விழுவது போன்றும், அப்போது அவர் கண்சிமிட்டிச் சிரிப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் நாம் தேர்வு செய்த மலரின் வாசத்தையும் நுகர முடியும். இந்த அமைப்புகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x