Published : 09 Apr 2021 03:47 PM
Last Updated : 09 Apr 2021 03:47 PM

கரோனா இரண்டாவது அலை இளம் தலைமுறையினரை அதிகம் பாதிக்கிறது: 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை

கரோனாவை தடுத்திட தடுப்பூசி அவசியம். மிகவிரைவாக, குறுகிய காலத்தில், குறைந்த பட்சம் 70 விழுக்காடு மக்களுக்காவது தடுப்பூசியை வழங்கிட வேண்டும். அப்பொழுதுதான் தடுப்பூசிகள் மூலம் கரோனா பரவலை தடுக்க முடியும். இந்த இலக்கை எட்டுவதற்கு, தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் உரிமையை மத்திய அரசே எடுத்துக் கொள்ள வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் இன்று வெளியிட்ட அறிக்கை:

கரோனா இரண்டாவது அலையை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி குறித்த மத்திய மாநில அரசுகளின் அறிவிப்புகள் ஏமாற்றம் அளிக்கின்றன. கரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருப்பதாகவும், அடுத்த நான்கு வாரங்கள் மிகவும் நெருக்கடியானவை எனவும் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால் கூறியுள்ளார்.

இந்நிலையில் கீழ்க் கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

* கரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ளத் தேவையான முக கவசம், பாதுகாப்பு கவச உடைகள், கிருமி நாசினி, கை சுத்திகரிப்பான் , வெப்பமானி, ஆக்சிஜன் அளவைமானி (pulse oxy meter), போன்றவற்றையும், ரெம்டிசிவிர், எனாக்சபிரின் போன்ற முக்கிய மருந்துகள் பதுக்கப்படுவதை தடுத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப் பொருட்களின் விலை அதிகரிக்காமலும், தரமான பொருட்கள் தட்டுப் பாடின்றி எளிதில் கிடைக்கவும் மத்திய மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்திட வேண்டும்.

* நாடு முழுவதும் மருத்துவக் கட்டமைப்பை அதிகரித்து, மேம்படுத்த வேண்டும். போதிய மருத்துவத் துறை பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.

* கரோனாவை தடுத்திட தடுப்பூசி அவசியம். மிகவிரைவாக, குறுகிய காலத்தில், குறைந்த பட்சம் 70 விழுக்காடு மக்களுக்காவது தடுப்பூசியை வழங்கிட வேண்டும். அப்பொழுதுதான் தடுப்பூசிகள் மூலம் கரோனா பரவலை தடுக்க முடியும். அந்த இலக்கை எட்டுவது குறித்த திட்டத்தை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

* இந்த இலக்கை எட்டுவதற்கு, தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் உரிமையை மத்திய அரசே எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுத் துறை மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் அரசே கரோனா தடுப்பூசி தயாரிப்பில் இறங்க வேண்டும்.

* கரோனா தடுப்பூசியை முற்றிலும் இலவசமாக மக்களுக்கு வழங்க வேண்டும்.

* கரோனா முதியவர்களையும், இணை நோயர்களையும் அதிகம் பாதிக்கிறது. இரண்டாவது அலை இளம் வயதினரையும், இணை நோயற்றவர்களையும் கூட பாதிக்கிறது. இந்த இளம் வயதினர் வேலை நிமித்தமாக வீடுகளுக்கு வெளியே அதிக நேரம் இருக்கின்றனர்.

எனவே, இவர்களுக்கு தொற்று பரவும் வாய்ப்பு அதிகம். இவர்கள் மூலம் மற்றவர்களுக்கு தொற்று பரவும் ஆபத்தும் அதிகம். எனவே 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை வழங்க வேண்டும்.

இந்நிலையில்' தேவைப் படுவோர்களுக்கு மட்டும் தடுப்பூசி வழங்கப்படும் ' என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது. அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டியது அரசின் கடமையாகும். அதைப் பெறுவது மக்களின் அடிப்படை உரிமையாகும்.

* அறிவியலுக்கு எதிராகவும் தடுப்பூசிகளுக்கு எதிராகவும் தவறான கருத்துக்களை மக்களிடம் பரப்புவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

* கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே வேளையில் டெங்குக் காய்ச்சல் பரவலை தடுத்திடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். கர்ப்பக் கால பெண்களின் பராமரிப்பு போன்ற இதர சுகாதாரத்துறை நடவடிக்கைகள் பாதிக்கப் படாமலும் அரசு செயல்பட வேண்டும்.

* கரோனா தொற்றின் அறிகுறிகள், தற்பொழுது அது உருவாக்கும் புதிய அறிகுறிகள், தடுப்பூசியின் பயன்கள், தடுப்பூசி போடப்படும் இடங்கள் போன்றவை பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்வதில் உள்ள தயக்கம், சுணக்கத்திற்கான காரணங்களை ஆராய்ந்து அதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

* முகக் கவசம் அணிதல், கை கழுவுதல், தனிநபர் இடைவெளியை பராமரித்தல் போன்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

* திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள் செயல்பாட்டை முற்றிலும் தற்காலிகமாக தடை செய்ய வேண்டும். மதுக் கடைகள் மூடப்பட வேண்டும்.

* ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கருவிகளின் அடக்க விலை 200 ரூபாய் அளவிற்கு குறைந்துவிட்ட நிலையில், பரிசோதனைக்கான கட்டணம் 1500 ரூபாய் வரை தமிழகத்தில் உள்ளது. அதை பிற மாநிலங்களைப் போல 400 ரூபாய் வரை குறைத்திட வேண்டும்.

* Complete Blood Count, C Reactive Protein போன்ற எளிதில் எல்லா இடங்களிலும் செய்யக்கூடிய, கட்டணமும் குறைவான இரத்தப் பரிசோதனைகளை அடிப்படையாக கொண்டு கரோனா நோயாளிகளை வகைப்படுத்த வேண்டும். அப்பரிசோதனைகளை 2 நாட்களுக்கு ஒருமுறை செய்வதின் மூலம் நோய் தீவிரமடைகிறதா அல்லது குறைகிறதா என்பதை அறிய முடியும்.

அதன் அடிப்படையில் கரோனா தொற்றாளர்களை வீட்டுச் சிகிச்சை, கரோனா சிகிச்சை மைய சிகிச்சை, சிறிய மருத்துவ மனைகளில் சிகிச்சை, பெரிய மருத்துவ மனைகளில் சிகிச்சை என வகைப்படுத்தி சிகிச்சை வழங்கமுடியும். இவ்வாறு செய்வது கூடுதல் நன்மை பயக்கும்.

ஒரு சில மருத்துவ மனைகளில் மட்டும் நோயாளிகள் குவிவதை தடுத்திட முடியும் என்ற கருத்தை பல மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இதை ஆராய்ந்து நடைமுறைப்படுத்திட வேண்டும்.

* அரசு மருத்துவ வல்லுனர் குழு மூலம் பல தரப்பட்ட மருத்துவர்களின் கள அனுபவங்களைப் பெற்று, ஆராய்ந்து அவ்வப்பொழுது மருத்துவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கிட வேண்டும். அதன் மூலம் சுகாதாரத்துறையின் மனித வளத்தையும், கட்டமைப்பையையும் சரியான வகையில் பயன்படுத்த முடியும்.

* கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து உயிரையும் துச்சமெனக் கருதி , கடுமையாக பணியாற்றி வரும் மருத்துவத் துறை பணியாளர்கள் அதிக உடல் மற்றும் உள ரீதியான சோர்வுகளுக்கு உள்ளாகி உள்ளனர். அவர்களது தன்னலமற்ற உழைப்பை மத்திய மாநில அரசுகள் அங்கீகரிக்கவில்லை. அவர்களது நியாயமான நீண்ட காலக் கோரிக்கைகள் கூட நிறைவேற்றப் படவில்லை.

* எனவே, உடனடியாக தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக தொழில் நுட்பநர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் மருத்துவத் துறை பணியாளர்கள் அனைவரின் பணியையும் நிரந்தரப்படுத்த வேண்டும்.

* மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். கரோனா கால அரசின் வாக்குறுதிகளான ஒரு மாத சிறப்பு ஊதியம், கரோனாத்தொற்று ஏற்பட்டவர்களுக்கு ரூ 2 லட்சம் உதவி, இறப்பு ஏற்படின் ரூ 50 லட்சம் குடும்ப நிதி உதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி போன்றவற்றை நிறைவேற்ற வேண்டும். முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கும் இவற்றை வழங்க வேண்டும்.

* முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு உதவித் தொகையை உயர்த்த வேண்டும். அவர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். உடல் மற்றும் மனச் சோர்வை போக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் மருத்துவர்களையும், செவிலியர்களையும் உடனடியாக தமிழக அரசே நேரடியாக நியமித்திட வேண்டும். தனியார் நிறுவனங்கள் மூலம் நியமிக்கக் கூடாது.

* கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரியின், முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயற்சி மருத்துவர்களுக்கு முறையான உணவு, தனியான குவாரண்டைன் வசதிகள், இதர வசதிகளை உடனடியாக செய்து கொடுத்திட வேண்டும். இரண்டு மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பயிற்சிக்கால உதவி ஊதியத்தை( Stipend ) உடனடியாக வழங்கிட வேண்டும்.
அவர்களுக்கு தொடர்பில்லாத வேலைகள் கொடுக்கப்படுவதை உடனடியாக கைவிட வேண்டும். வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களது கோரிக்கைகளை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டும்.இதர மருத்துவ கல்லூரிகளிலும் இது போன்ற பிரச்சினைகள் உள்ளன. அவையும் சரி செய்யப் பட வேண்டும்.

* உயர் சிறப்பு மருத்துவக் கல்வி பயிலும் மருத்துவர்களை கரோனா பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்.அது அத்துறைகளின் சேவையை பாதிக்கிறது. இதனால் நோயாளிகள் பாதிக்கப்
படுகிறார்கள்.

* இறுதி ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட்டு, அவர்களை கரோனா சிகிச்சைப் பணிகளில் ஈடு படுத்திட வேண்டும். அவசியப்படின் கரோனா நோயாளிகள் பராமரிப்பு மையங்களில் மருத்துவ மாணவர்களையும் டெல்லி மாநில அரசைப்போல் ஈடுபடுத்த வேண்டும். அவர்களுக்கு அதற்கான உதவித் தொகையையும் வழங்கிட வேண்டும்.

* கரோனா தடுப்பு நடவடிக்கைகள் அறிவியல் பூர்வமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் மக்கள் நலன் சார்ந்தும் இருக்க வேண்டும்”.

இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x