

பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்த மனுவில், சசிகலா பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி மரணம் அடைந்தார். அதன் பின்னர் பொது செயலாளராக சசிகலாவை அதிமுகவினர் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டார்.
முதல்வராக சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்வான நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா நான்காண்டு தண்டனை விதிக்கப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக நியமித்துவிட்டு சசிகலா சிறைக்குச் சென்றார். இதனிடையே ஓபிஎஸ் அணி மீண்டும் அதிமுகவில் இணைக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னையில் நடைபெற்றது அந்த பொதுக்குழுவில் அதிமுக நிர்வாகிகள் சசிகலா தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுச் செயலாளர் நியமிக்கப்படும் வரை இடைக்கால ஏற்பாடாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ஏற்படுத்ததப்பட்டது.
ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர். கட்சியின் விதிமுறைகளை மீறி நடந்ததால் அதிமுகவின் பொதுக்குழுக்கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா உள்ள நிலையில் கட்சி விரோதமான செயல்பாடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களும் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டியிருந்தனர்.
பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பாக தங்களை கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் துணைப்பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தனர். இந்த வழக்கில் வழக்கு கட்டணமாக 25 லட்ச ரூபாய் செலுத்தப்பட்டிருந்தது.
அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், கட்சியின் வங்கி கணக்குகள் குறித்த விவரங்களையும், கட்சி தொடர்பான அனைத்து ஆவணங்களையும், அதிமுக தலைமைக்கழக மேலாளர் மகாலிங்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து, வங்கிகளின் மேலாளர்கள் வங்கி கணக்குகளை சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் தரப்பினருக்கு வழங்கினர். இந்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் நீதிமன்ற கட்டணமாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தும் வழக்குகளை மட்டுமே உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமென விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து சசிகலா, தினகரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கு சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
நீதிபதி ரவி முன்பு கடந்த முறை விசாரனைக்கு வந்தபோது, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருவதால், அதிமுக-விற்கு எதிரான வழக்கை கைவிடுவதாக டி.டி.வி.தினகரன் தரப்பில் தெரிவிக்கபட்டது.
இந்நிலையில் சசிகலா தொடர்ந்த வழக்கை நிராக்கக்கோரி அதிமுக நிர்வாகிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுவிற்கு சசிகலா பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 23 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.