

அரக்கோணம் அருகே இரட்டைக் கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு, தமிழக அரசு உடனே நிதி உதவி அளிக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, வைகோ இன்று (ஏப். 09) வெளியிட்ட அறிக்கை:
"ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் காவல் நிலைய வட்டம், சோகனூர் கிராமத்தில் நடந்த வன்முறைகளில், அர்ஜூன், சூர்யா ஆகிய இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்; மேலும், மூன்று பேர் படுகாயம் அடைந்தனர் என்பதை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இறந்தவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்; காயம் அடைந்தவர்கள் நலம் பெற விழைகின்றேன்.
சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி இப்படுகொலைகள் நடைபெற்றதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குற்றம்சாட்டி இருக்கின்றது. குற்றவாளிகளைக் காவல்துறையினர் உடனே கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் சாதி, மத வெறி மோதல்களுக்கு யாரும் இடம் அளிக்கக் கூடாது; தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ வேண்டும். சமூக நல்லிணக்கம் நிலவ வேண்டும்.
அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டிக் கொண்டு இருக்கின்ற முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டில், எந்தக் காரணத்தைக் கொண்டும், சாதி, மத வெறுப்பு உணர்வு வளர்ந்திடக் கூடாது; அத்தகைய நடவடிக்கைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
இறந்தவர்கள் குடும்பங்களுக்கு, தமிழக அரசு உடனே நிதி உதவி அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்".
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.