Published : 09 Apr 2021 01:01 PM
Last Updated : 09 Apr 2021 01:01 PM

கழிவு நீர், சாக்கடை அடைப்பு நீக்கும் பணியில் தனியார் ஊழியர்களை ஈடுபடுத்தி மரணம் ஏற்பட்டால் ரூ.10 லட்சம் இழப்பீடு வசூல், சிறைத்தண்டனை: குடிநீர் வாரியம் எச்சரிக்கை

சென்னை

கழிவு நீர்த்தொட்டி, சாக்கடை அடைப்பு நீக்குதல் பணியில் குடிநீர் வழங்கல் கழிவுநீரகற்று ஊழியர்களை ஈடுபடுத்தாமல் தனியார், ஒப்பந்த தொழிலாளர்களை ஈடுபடுத்தி உயிரிழப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்களிடம் ரூ.10 லட்சம் இழப்பீடு வசூலிக்கப்படும், சிறைத்தண்டனையும் கிடைக்கும் என குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் விடுத்துள்ள எச்சரிக்கை வருமாறு:

“சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கழிவுநீர் அடைப்புகளை சரி செய்தல், சுத்தம் செய்தல் மற்றும் அதனைச் சார்ந்த அனைத்து பணிகளும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை மாநகரத்தில் வசிக்கும் பொது மக்களின் வீடு மற்றும் பொது இடங்களின் கழிவுநீர் அடைப்பு குறித்த புகார்களை சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத் தலைமை அலுவலகத்தில் 24ஓ7 அடிப்படையில் இயங்கி வரும் அழைப்பு மையத்தை 4567 4567 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

மேலும், பாதாள சாக்கடையை பாதுகாப்பற்ற முறையிலும், உரிய கவசங்கள் அணியாமல் சுத்தம் செய்தல் மற்றும் மனித நுழைவு வாயிலில் சட்டத்திற்கு புறம்பாக நுழைவது குறித்த புகார்களை "சஃபாய் மித்ரா சுரக்ஷா சேலஞ்" திட்டத்தின் கீழ் தேசிய உதவி எண். "14420" தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அழைப்பு மையத்தில் 24ஓ7 அடிப்படையில் இயங்கிவரும் மேற்குறிப்பிட்டுள்ள எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு நாளிதழ் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்களின் மறுவாழ்வு சட்டம் 2013-ன் படி, சென்னைக் குடிநீர் வாரியம் கழிவுநீர் அடைப்பை சரி செய்யும் பணிகளை மேற்கொள்ளும் போதும் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் போதும் எந்த ஒரு சூழ்நிலையிலும் பணியாளர்கள் கழிவு நீர் குழிக்குள் இறங்க விடாமலும், கழிவுநீர் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் அனைவரும் முகக் கவசம், கையுறை, பாதுகாப்பு உடை மற்றும் காலணிகள் கட்டாயம் அணிய வேண்டும் என்ற விதிகளை பின்பற்றியும் மற்றும் நவீன இயந்திரங்களை முழுமையாக பயன்படுத்தியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சென்னை மாநகரத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் பொது இடங்களில் ஏற்படும் கழிவுநீர் அடைப்பு மற்றும் பிற பராமரிப்பு பணிகளை தன்னிச்சையாகவோ அல்லது ஒப்பந்ததாரர் மூலமாகவோ மேற்கொள்ளக் கூடாது. இவ்வாறான பணிகளை சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வாரியத்தின் மூலமே இப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கழிவு நீர் அடைப்பு ஏற்படும் பட்சத்தில், வீட்டின் உரிமையாளர், வீட்டில் வாடகைக்கு குடியிருப்போர், தனியார் நிறுவனங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்களின் உரிமையாளர்/தியேட்டர் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சுத்தம் செய்யும் பணியாளர்களை தன்னிச்சையாக நேரடியாக ஈடுபடுத்தி அதனால் கழிவுநீர் குழியில் விஷவாயு தாக்கி இறக்க நேரிட்டால், கீழ்க்கண்ட சட்டங்களின் படி, நடவடிக்கை மேற்கோள்ளப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.

(அ) உச்சநீதிமன்ற ஆணை எண். 583/2003 நாள்: 27.03.2014-ன் படி இறந்த பணியாளரின் குடும்பத்திற்கு தலா ரூ.10,00,000/- (ரூபாய் பத்து இலட்சம் மட்டும்) இழப்பீடு வழங்குவதற்கு முழுப் பொறுப்பாவார்கள்

(ஆ) மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்களின் மறுவாழ்வு சட்டம் - 2013, பிரிவு-7 மற்றும் 9-ல் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுவோர் மீது இரண்டு வருட சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் அல்லது அபராதம் ரூபாய் இரண்டு இலட்சம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும். மேலும், விதிமுறைகளை தொடர்ச்சியாக மீறுவோர் மீது ஐந்து வருட சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் அல்லது அபராதம் ரூபாய் ஐந்து இலட்சம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும்.

(இ) இறந்த பணியாளர் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சார்ந்தவராக இருந்தால் Scheduled Castes and the Scheduled Tribes (Prevention of Atrocities) Amendment Act, 2015 பிரிவு 3 (2) (எ)-ன் படி, 10 வருட சிறைத் தண்டனை அல்லது வாழ்நாள் சிறைத் தண்டணை அபராதத்துடன் விதிக்கப்படும்.

(ஈ) இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு-304 (IPC Section- 304 (A)-ன் கீழ் கடமை தவறுல் (Negligence of duty) என்ற அடிப்படையில் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்படும்.

ஆகவே, சென்னைப் பெருநகர மாநகராட்யில் வசிக்கும் பொது மக்கள் கழிவு நீர் அடைப்பு மற்றும் பராமரிப்பு பணியில் ஈடுபடும் போது மேற்கண்ட விதிமுறைகளை கடைப்பிடித்து மிகவும் எச்சரிக்கையாகவும் மற்றும் மிகவும் கவனத்துடனும் செயல்படுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்”.

இவ்வாறு குடிநீர் வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x