Published : 09 Apr 2021 12:49 PM
Last Updated : 09 Apr 2021 12:49 PM

குடிநீர், நீர் மோர் பந்தல்களை அமையுங்கள்: கரோனா தடுப்பு பணிகளிலும் ஈடுபடுங்கள்; அதிமுகவினருக்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவுறுத்தல்

தாங்கள் வாழும் பகுதிகளில், ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை உடனடியாக அமைக்க வேண்டும் என, அதிமுகவினரை ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (ஏப். 09) வெளியிட்ட அறிக்கை:

"அதிமுக-வும் அதிமுக அரசும், தன்னலம் கருதாமல் பொது நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கட்சிப் பணிகளை ஆற்றுவதிலும், மக்கள் பணிகளை மேற்கொள்வதிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது என்பதை பெருமையோடு சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.

அதிமுக-வின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில், அதிமுகவின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், அதிமுக உடன்பிறப்புகளும், தாங்கள் வாழும் பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர் பந்தல்கள், நீர் மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தைத் தணிப்பது வழக்கம்.

அதேபோல், இந்த ஆண்டும், சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களைக் காக்கும் பொருட்டு, அதிமுக நிர்வாகிகளும், அதிமுக உடன்பிறப்புகளும் இப்பொழுதே தாங்கள் வாழும் பகுதிகளில், ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை உடனடியாக அமைத்து, மக்களின் தாகத்தைத் தணிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

அதிமுக நிர்வாகிகளும், அதிமுக உடன்பிறப்புகளும், பொதுமக்களின் தாகத்தைத் தணிப்பதற்காக ஆங்காங்கே அமைக்கும் குடிநீர்ப் பந்தல்கள் மற்றும் நீர் மோர் பந்தல்களை காலையில் ஒரு முறையும், பிற்பகல் ஒரு முறையும் நேரில் சென்று பார்வையிட்டு, சுகாதாரமான முறையில் அவை செயல்படுவதற்கு ஏற்ற திட்டத்தோடு இந்தப் பணியினை நடைமுறைப்படுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், கடந்த சில நாட்களாக கரோனாவின் தாக்கம் அதிகரித்திருப்பதால், அதுபற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தியும், கரோனா தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு, ஆங்காங்கே கபசுரக் குடிநீர், முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை வழங்குமாறும், மேற்கண்ட பணிகளை, கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படுத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்".

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x