

அரக்கோணம் அருகே இரட்டைப் படுகொலையில் சம்மந்தப்பட்ட அனைவரையும் காவல்துறையினர் தனிப்படை அமைத்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஏப். 09) வெளியிட்ட அறிக்கை:
"அரக்கோணம் சட்டப்பேரவைத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் கௌதம சன்னா-வுக்கு ஆதரவாக தீவிரமாக தேர்தல் பணியாற்றிய, அந்த தொகுதியில் உள்ள சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன், சூர்யா ஆகியோர் பெருமாள்ராஜபேட்டையை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட வன்முறை கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் கடுமையான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. இக்கொலையில் சம்மந்தப்பட்டவர்களின் 20 பேர் கொண்ட பட்டியல் காவல்துறையிடம் வழங்கப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறு பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சம்மந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென்று நேற்று குருவராஜபேட்டை - திருத்தணி சாலையில், சோகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த படுகொலைகளுக்கு நியாயம் கேட்டு போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.
எனவே, இப்படுகொலையில் சம்மந்தப்பட்ட அனைவரையும் காவல்துறையினர் தனிப்படை அமைத்து உடனடியாக கைது செய்ய வேண்டும். அரசியல் விரோதம் காரணமாக நிகழ்த்தப்பட்ட இப்படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறேன். தேர்தல் முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்ட அவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு தலா ரூபாய் 50 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
படுகொலை செய்தவர்கள் மீது உரிய வழக்கு தொடுக்கப்பட்டு, முறையான விசாரணை நடத்தப்படுவதன் மூலமே பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி வழங்க முடியும். அந்த வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென காவல்துறையினரை கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.