Published : 09 Apr 2021 12:18 PM
Last Updated : 09 Apr 2021 12:18 PM

ராஜா முத்தையா மருத்துவ-பல் மருத்துவ கல்லூரிகளுக்கு தேர்வு நடத்தக்கோரி வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை

அரசு கல்லூரிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இரு கல்லூரிகளுக்கும் தேர்வு நடத்தும்படி, தமிழக அரசுக்கும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிடக்கோரிய வழக்கில் அரசும், பல்கலைக்கழகமும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிர்வாக முறைகேடுகள் காரணமாக, சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்துவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியும், பல் மருத்துவ கல்லூரியும், அரசு கல்லூரிகளாக அறிவித்தும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

அத்துடன் அரசு மருத்துவ கல்லூரி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையே, கடலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியாக அறிவிக்கப்பட்டுள்ள ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கும் நிர்ணயிக்க வேண்டும் என உத்தரவிட்ட தமிழக அரசு, இக்கல்லூரி மாணவர்கள், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் நடத்தும் தேர்வுகளில் கலந்து கொள்ளும் வகையில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ இணைப்பு பெற நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியிருந்தது.

அதன்படி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக இணைப்பு பெற தமிழக மருத்துவ கல்வி இயக்குனரகம் விண்ணப்பித்துள்ள நிலையில், அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ள ராஜா முத்தையா மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடத்தும்படி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தை இரு கல்லூரிகளும் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறி, சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், “அரசு கல்லூரிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இரு கல்லூரிகளுக்கும் தேர்வு நடத்தும்படி, தமிழக அரசுக்கும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிட வேண்டும்”. எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, தமிழக அரசு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x