கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு வந்தால் 10% தள்ளுபடி: புதுச்சேரி உணவகங்கள் சங்கம் அறிவிப்பு
கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு வருபவர்களுக்கு புதுச்சேரியில் உணவகங்களில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என புதுச்சேரி விடுதிகள் மற்றும் உணவகங்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்று தற்போது படிப்படியாக மேலும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் கரோனா தடுப்பூசி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும், வரும் 14-ம் தேதி முதல் ஆட்டோ மற்றும் டெம்போ ஓட்டுநர்களுக்கும் பால் வினியோகம் செய்யும் தொழிலாளர்களுக்கும் கரோனா தடுப்பு மருந்து வழங்க முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
இதனிடையே புதுச்சேரி விடுதிகள் மற்றும் உணவகங்கள் சங்கத்தினர் கரோனா தடுப்பூசியை மக்கள் போட்டுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக புதியதொரு சலுகையை அறிவித்துள்ளனர். அதன்படி கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழைக் காட்டினால் அவர்கள் சாப்பிடும் உணவிற்கு 10 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதுமையாக இருந்தாலும் இந்த அறிவிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
இதுகுறித்துச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாஸ்கர் கூறுகையில், " புதுச்சேரியில் 300 உணவகங்கள் உள்ளன. கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த பத்து சதவீதம் தள்ளுபடி தர முடிவு எடுத்துள்ளோம். ஆனால் தள்ளுபடி தருவது உணவக நிர்வாகத்தின் தனிப்பட்ட விருப்பம்" என்று குறிப்பிட்டார்.
