

நாட்டின் கலாச்சார மேன்மையையும் பெருமையையும் அனைவரும் அறியும் வண்ணம் செய்த சேவாசுவாமி மெமோரியல் பவுண்டேஷன் சார்பில் பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஸ்ரீ தேசிக தர்சன பஞ்சாங்கம் (பிலவ வருடம் – 2021-22) அண்மையில் வெளியிடப்பட்டது.
சேவா சுவாமி என்று அனைவராலும் அழைக்கப்படும் அரசாணிப்பாலை நல்லூர் ஸ்ரீனிவாச ராகவாச்சாரியார் சுவாமிகளால் 1972-ல்தொடங்கி, தொடர்ந்து வெளியிடப்பட்டு வரும் ஸ்ரீ தேசிக தர்சன பஞ்சாங்கம், இந்த ஆண்டு தனது 50-வது இதழை வெளியிட்டது. தமிழ்,தெலுங்கு வருடப்பிறப்பை ஒட்டி ஒவ்வொரு வருடமும் அந்தந்த வருடத்துக்கான பஞ்சாங்கம் வெளியிடப்படுவது வழக்கம்.
அண்மையில் பங்குனி உத்திரதினத்தில் வில்லிவாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பஞ்சாங்கத்தின் தமிழ், தெலுங்கு பதிப்புகள் வெளியிடப்பட்டன. சுவாமி தேசிகன் அருளிய ஸ்ரீஸ்துதியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. வேத மந்திரங்கள் ஓதப்பட்ட பின்னர், சேவாசுவாமியின் மகனும் பதிப்பாளருமான என்.எஸ்.கண்டாமணி வரவேற்புரை ஆற்றினார், உருப்பட்டூர் சவுந்தரராஜன் பஞ்சாங்கங்களை வெளியிட, உருப்பட்டூர் சுந்தர், பிள்ளைப்பாக்கம் வாசுதேவாச்சாரியார் முதல் பிரதிகளை பெற்றுக்கொண்டனர். என்.எஸ்.ராஜகோபாலன், உருப்பட்டூர் சவுந்தரராஜன் ஆகியோர் பஞ்சாங்கங்களின் சிறப்பு அம்சங்களைக் குறிப்பிட்டு,சேவா சுவாமி ஆற்றிய தொண்டுகள் குறித்து விரிவாகப் பேசினர். நிகழ்ச்சியில் வேதவிற்பன்னர்கள் பலர் கவுரவிக்கப்பட்டனர்.
இந்த பஞ்சாங்கம், அடிப்படை பண்பாடு, கலாச்சார செய்திகள், ஆன்மிகம் தொடர்பான அடிப்படை விஷயங்கள், நித்ய கர்மாக்கள், திவ்ய தேச எம்பெருமான்கள், ஆச்சாரியர்களின் படங்கள், தனியன்கள், தர்ப்பண மந்திரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும் தகவல்களுக்கு 044-26180481, 98410 46264 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.