தமிழகம் வர நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்: மாநில எல்லைகளில் மீண்டும் தீவிர சோதனைக்கு உத்தரவு

தமிழகம் வர நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்: மாநில எல்லைகளில் மீண்டும் தீவிர சோதனைக்கு உத்தரவு
Updated on
1 min read

வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு நாளை முதல் இ-பாஸ் கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ளதால், மாநில எல்லைகளில் போலீஸார் தீவிர வாகன சோதனை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் புதியகட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தீவிர கண்காணிப்புக்கு பிறகே சொந்த ஊருக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் நாளை (ஏப்.10) முதல் அமலுக்கு வருகின்றன. இதையொட்டி, மாநிலஎல்லைகளில் போலீஸாரை குவித்து தீவிர வாகன சோதனைநடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அண்டை மாநிலங்களான புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் வாங்க வேண்டும். அலுவலகப் பணி, தொழில், மருத்துவம் உள்ளிட்ட காரணங்களை கூறினாலும் இ-பாஸ்இல்லாதவர்களை அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புமாறும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பொது இடங்களில் முகக் கவசம் இல்லாமல் வருபவர்களுக்கு ரூ.200அபராதம் வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெல்மெட் சோதனை செய்யும் போலீஸார், வாகன ஓட்டிகள் முகக் கவசம் அணிந்துள்ளனரா என்பதையும் கவனித்து அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா கட்டுப்பாடுகளை போலீஸாரும் தீவிரமாக கடைபிடிக்குமாறு காவல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைவரும் முகக் கவசம் அணிவதையும், சானிடைசர் பயன்படுத்துவதையும் காவல் நிலைய ஆய்வாளர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புகார் கொடுக்க முகக் கவசம் அணியாமல் வருபவர்களை காவல் நிலையத்துக்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in