

வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாததால், திருப்பூர் மாநகரில் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகளை காரணம்காட்டி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால், உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டுமென தேர்தல் ஆணையம்அறிவுறுத்தியிருந்தது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஏடிஎம் மையங்களில் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட தொகை,உரிய ஆவணங்கள் இல்லாத தால் லட்சக்கணக்கில்பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல, ரூ.10 லட்சத்துக்கு மேல் வைத்திருந்த தொகையை வருமான வரித்துறை கைப்பற்றினர். இந்த நடைமுறையால், வங்கிகளின் பணப் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டன. மேலும், ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணியில் வங்கிகள் தயக்கம் காட்டின. இதனால், ஒரு வாரமாக ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாத நிலை நீடித்தது.
இதுதொடர்பாக திருப்பூர்மாநகரை சேர்ந்த சே.பாலசுப்பிரமணி என்பவர் கூறும்போது, "தனியார் மற்றும் அரசு வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பப்படாமல் இருந்ததால், பொதுமக்கள் பல்வேறு இடங்களை தேடி சென்று பணம் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். வங்கிகளின் ஏடிஎம்களில் நிரப்புவதற்கு கொண்டுவரப்பட்ட லட்சக்கணக்கான தொகையை, தேர்தல் விதிகளை காரணம்காட்டி பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
இதனால், பல வங்கிகள்தேர்தல் காலத்தை ஒட்டி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் முடிவை கைவிட்டன. தற்போது தேர்தல் முடிந்து நிலைமை சீரடைந்திருப்பதால், அனைத்து வங்கிகளின் ஏடிஎம் கிளைகளிலும் போதிய பணம் நிரப்பி, மக்களுக்கு பணம் எடுக்கும் சேவையை எளிதாக்க வேண்டும்" என்றார்.
வருவாய்த் துறையினர் கூறும்போது, "தேர்தல் முடிந்ததால், தற்போது பறக்கும்படைகள் கலைக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியான பணிகளை தொடர உள்ளோம்" என்றனர்.
திருப்பூர் மாவட்ட முன்னோடிவங்கி மேலாளர் அலெக்சாண்டர், ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, "தேர்தல் பணியில் மைக்ரோ அப்சர்வர் மட்டுமின்றி, வாக்குப்பதிவுக்கும் வங்கி ஊழியர்கள் சென்றிருந்ததால், வங்கி நடைமுறைகள் பாதிக்கப்பட்டன. பறக்கும் படையினர் ஆய்வால் லேசான பாதிப்பு இருந்தது. அனைத்து வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களிலும் பணத்தட்டுப்பாடு இன்று( ஏப்.9) முதல் தீர்க்கப்படும்" என்றார்.