Published : 25 Dec 2015 10:56 AM
Last Updated : 25 Dec 2015 10:56 AM

சென்னை முதல் குமரி வரை: மதுவிலக்கு பாதயாத்திரை இன்று தொடக்கம் - குமரி அனந்தன் தலைமையில் பங்கேற்பு

அகில இந்திய மதுவிலக்கு பேரவை சார்பில் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான மதுவிலக்கு பாதயாத்திரை இன்று தொடங்குகிறது. இதில் குமரி அனந்தன் தலைமையில் 30 பேர் பங்கேற்கின்றனர்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் காந்திய பேரவைத் தலைவர் குமரி அனந்தன் நேற்று கூறியதாவது:

‘நமது இலக்கு மதுவிலக்கு’

மதுவிலக்கின் அவசியம் குறித்து நாடு முழுவதும் அகில இந்திய மதுவிலக்கு பேரவை பிரச்சாரம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ‘நமது இலக்கு மதுவிலக்கு’ என்ற முழக்கத்துடன் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான மதுவிலக்கு பாதயாத்திரை நடத்தப்படுகிறது.

25-ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு சென்னை பாரிமுனையில் உள்ள ராஜாஜி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, அங்கிருந்து பாதயாத்திரை புறப்படுகிறது. என் தலைமையில் 30 பேர் பங் கேற்கின்றனர். பாதயாத்திரையை அகில இந்திய மதுவிலக்குப் பேரவை தலைவர் ரஜனிஷ்குமார், சுதந்திரப் போராட்ட வீரர் ராம்ஜி சிங் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

அனைத்து அரசியல் கட்சி களையும் சந்தித்து இந்த யாத்திரைக்கு ஆதரவு கோரி யிருக்கிறேன். அனைவரும் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன். மதுவின் தீமை குறித்து வழிநெடுகிலும் எங்கள் குழு பிரச்சாரம் செய்யும். இந்த பாத யாத்திரை 2016 பிப்ரவரி 12-ம் தேதி கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள காந்தி நினைவிடத்தில் நிறைவு பெறுகிறது.

இவ்வாறு குமரி அனந்தன் கூறினார்.

மதுவிலக்கு பேரவை தலைவர் ரஜனிஷ்குமார் கூறும்போது, ‘‘தமிழகத்தில் சுதந்திரத்துக்கு முன்பே மதுவிலக்கு கோரியவர் ராஜாஜி. அவரது சிலைக்கு மாலை அணிவித்து தொடங்கப்படும் பாத யாத்திரை, மதுவுக்கு எதிராகப் போராடிய காந்தி மகானின் அஸ்தி கரைக்கப்பட்ட கன்னியாகுமரி கடற்கரையில் நிறைவடைகிறது. இந்த யாத்திரை நிச்சயம் வெற்றி பெறும்’’ என்றார்.

சுதந்திரப் போராட்ட வீரர் ராம்ஜி சிங், தக்கர் பாபா வித்யாலயா தலைவர் எஸ்.பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x