சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் கடந்த ஆண்டைவிட 3 டிஎம்சி தண்ணீர் கூடுதல் இருப்பு: இந்த ஆண்டில் தட்டுப்பாடு இருக்காது என அதிகாரிகள் உறுதி

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் கடந்த ஆண்டைவிட 3 டிஎம்சி தண்ணீர் கூடுதல் இருப்பு: இந்த ஆண்டில் தட்டுப்பாடு இருக்காது என அதிகாரிகள் உறுதி
Updated on
1 min read

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில், நீர் இருப்பு கணிசமாக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 3 டிஎம்சி நீர் இருப்பு அதிகமாக உள்ளதால் இந்த ஆண்டில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சென்னைக்கு பூண்டி, புழல்,செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகளில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. வடகிழக்குப் பருவமழையும், தென்மேற்கு பருவமழையும் இயல்பைவிட அதிகமாகப் பொழிந்ததால் சென்னை குடிநீர் ஏரிகள் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்களில் போதிய அளவு நீர் இருப்பு உள்ளது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்திருக்கிறது. இதனால் தமிழகத்தில் விவசாயப் பணிகள் தடையின்றி நடைபெறுகிறது. குடிநீர் தட்டுப்பாடும் இல்லை.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கனஅடி. நேற்றைய நிலவரப்படி இந்த ஏரிகளின் நீர்இருப்பு 9,073 மில்லியன் கனஅடியாக இருந்தது. கடந்தாண்டு இதே நாளில் 6,278 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஏரிகளில் 3 டிஎம்சி கூடுதலாக நீர்இருப்பு இருப்பதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

அவர்கள் மேலும் கூறும்போது, “சென்னையில் கோடைக் காலம் மற்றும் கரோனா காரணமாக தண்ணீரின் தேவை சுமார் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ள போதிலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. தினமும் 830 மி்ல்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுவதால் மக்களுக்கு தட்டுப்பாடில்லாமல் குடிநீர் கிடைக்கிறது. குழாய் மூலம் குடிநீர் விநியோகம் இல்லாத இடங்களில் 454 லாரிகளைக் கொண்டு தினமும் 3 ஆயிரம் முதல் 3,500 வரை லாரி டிரிப்புகள் வரை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது

பொதுமக்களுக்கு இலவசமாகவும், அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு பணம் பெற்றுக்கொண்டும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. 16 ஆயிரம் லிட்டர், 9 ஆயிரம் லிட்டர், 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகளைக் கொண்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in