தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சென்னையில் என்ஐஏ கிளை தொடக்கம்

தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சென்னையில் என்ஐஏ கிளை தொடக்கம்
Updated on
1 min read

தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) புதிய கிளை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்குபுதிய எஸ்.பி.யும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது. இதன் தலைமையகம் டெல்லியில் உள்ளது. மும்பை, கொல்கத்தா, குவாஹாட்டி, ஜம்மு, லக்னோ, ராய்ப்பூர், சண்டிகர், ஹைதராபாத், கொச்சி ஆகிய இடங்களில் இதன் கிளை அலுவலகங்கள் உள்ளன.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை கொச்சியில் உள்ள அதிகாரிகளே விசாரித்து வந்தனர். இதனால், வழக்கு விசாரணையில் தேக்கம் ஏற்பட்டது. தவிர, தமிழகத்தில் தீவிரவாதம் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்த வேண்டி இருந்ததால் என்ஐஏ கிளையை தமிழகத்திலும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில், சென்னை (தமிழகம்), ராஞ்சி (ஜார்க்கண்ட்), இம்பால் (மணிப்பூர்) ஆகிய நகரங்களிலும் என்ஐஏ கிளையை அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த செப்டம்பரில் அனுமதி வழங்கியது.

இதை தொடர்ந்து, சென்னையில் கிளை அமைக்கும் பணிகள் வேகமாக நடந்தன.

இந்நிலையில், சென்னை புரசைவாக்கத்தில் என்ஐஏ கிளை அலுவலகம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதன் எஸ்.பி.யாக ஜித் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் ஆய்வாளர் உட்பட 8 பேர் இங்கு பணிபுரிகின்றனர்.

இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் தீவிரவாத சம்பவங்களுடன் தொடர்புடைய 351 வழக்குகளை என்ஐஏ நேரடியாக விசாரித்து வருகிறது. இதில், தமிழக காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு, தீவிரவாதிகளுக்கு சிம் கார்டு விற்பனை செய்யப்பட்ட வழக்கு, தமிழகத்தில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தவர்களின் வழக்கு என 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் 2 வழக்குகளை என்ஐஏ பதிவு செய்துள்ளது. புதுச்சேரியில் கடந்த2014-ல் அப்போதைய முதல்வர்நாராயணசாமி வீட்டருகே நிறுத்தப்பட்ட காரில் இருந்து பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கையும் என்ஐஏ விசாரித்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in