சென்னையில் 3 வழித்தடங்களில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: அடுத்த ஆண்டு இறுதியில் பணியைத் தொடங்க திட்டம்

சென்னையில் 3 வழித்தடங்களில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: அடுத்த ஆண்டு இறுதியில் பணியைத் தொடங்க திட்டம்
Updated on
2 min read

மாதவரம்- கலங்கரை விளக்கம், கோயம்பேடு- ஈஞ்சம்பாக்கம், மாதவரம்- பெரும்பாக்கம் ஆகிய மூன்று மார்க்கங்களில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளது. இந்த மூன்று வழித்தடங்களின் 76 கிலோ மீட்டர் நீள பாதையில் 90 சதவீதம் சுரங்கப் பாதையாக இருக்கும்.

சென்னையில் மூன்று வழித் தடங்களில் அமைக்கப்படவுள்ள இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கு ரூ.36,100 கோடி செலவாகும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென்று பிரதமர் நரேந்திரமோடியிடம் முதல்வர் ஜெயலலிதா நேரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன.

மாதவரம் கலங்கரை விளக்கம்

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணி, மூன்று வழித்தடங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி, முதல்வழித்தடம் மாதவரம் கலங்கரை விளக்கம் இடையே 17 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுகிறது. இதற்கான உத்தேச செலவு ரூ.8,075 கோடி. இந்த வழித்தடம், பெரம்பூர், அயனாவரம், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, அண்ணா மேம்பாலம் (ஜெமினி), ராதாகிருஷ்ணன் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் வழியாகச் செல்லும். இந்த இடங்கள் அனைத்திலும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

கோயம்பேடு - ஈஞ்சம்பாக்கம்

கோயம்பேடு ஈஞ்சம்பாக்கம் இடையே 27 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.12,825 கோடி செலவில் இரண்டாவது வழித்தடம் அமைக்கப்படுகிறது. இந்த வழித்தடம், சாலிகிராமம், வடபழனி, கோடம்பாக்கம், பனகல் பார்க், வெங்கட் நாராயணா ரோடு, நந்தனம், ஆழ்வார்பேட்டை டி.டி.கே. ரோடு, லஸ் சர்ச் ரோடு, ஆர்.கே. மடம் சாலை, மந்தைவெளி, அடையாறு, பெசன்ட்நகர், திருவான்மியூர் (பஸ் நிலையம் அருகே), கொட்டிவாக்கம் வழியாகச் செல்கிறது.

மாதவரம் - பெரும்பாக்கம்

மூன்றாவது வழித்தடம் மாதவரம் பெரும்பாக்கம் இடையே 32 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.15,200 கோடியில் அமைக்கப்படுகிறது. இந்த வழித்தடம், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர் மேற்கு, முகப்பேர், மதுரவாயல், வளசரவாக்கம், சென்னை வர்த்தக மையம் (நந்தம்பாக்கம்), ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் (ஓ.டி.ஏ.), ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மேடவாக்கம் வழியாகச் செல்லும். தேவைப்பட்டால் பள்ளிக்கரணை வரை இந்த வழித்தடம் நீட்டிக்கப்படும்.

சென்னையில் தற்போது முதல்கட்டமாக மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் இரண்டு வழித்தடங்களில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்து கொண்டிருக்கிறது. இப்பணிகளை 2016-ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தைப் போல, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமும் முதல்கட்ட பணிகள் முடியும் முன்பே, 2-ம் கட்டப் பணிகளைத் தொடங்க திட்டமிட்டிருக்கிறது. அதன்படி, சென்னையில் மூன்று வழித்தடங்களில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை 2015-ம் ஆண்டு இறுதியில் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன.

90 சதவீதம் சுரங்கப் பாதை

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

2-ம் கட்ட திட்டப் பணிக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் கோரியுள்ளார். இதையடுத்து இப்பணிக்கான முன்னேற்பாடுகள் தொடங்கிவிட்டன. இத்திட்டத்துக்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், விரிவான திட்ட அறிக்கையும், திட்ட மதிப்பீட்டுச் செலவும் இறுதி செய்யப்படும். அடுத்த ஆண்டு இறுதியில் இப்பணியைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். மூன்று கட்டங்களின் மொத்தப் பாதையில் (76 கிலோ மீட்டர்) 90 சதவீதம் சுரங்கப்பாதையாக இருக்கும்.

விம்கோ நகர் வரை விரிவாக்கம்

தற்போது நடைபெற்று வரும் வண்ணாரப்பேட்டை விமான நிலையம் வரையிலான முதல் மெட்ரோ ரயில் வழித்தடத்தை வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர்வரை நீட்டிப்பதற்கான அனுமதியையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் கோரியுள்ளார். இந்த விரிவாக்கத் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததுடன், டெண்டர் கோரப்பட்டு பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும்.

இவ்வாறு அதிகாரி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in