

கரோனா உள்ளிட்ட தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 2,715 கூடுதல் சுகாதார ஆய்வாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தக்கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்தவழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் செல்வக்குமார் சார்பில் பதில் மனு தாக்கல்செய்யப்பட்டது. அதில், டெங்குகாய்ச்சலை பரப்பும் கொசு உற்பத்தியைத் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களின் லார்வா புழுக்களை உண்ணக்கூடிய மீன்கள் ஏரி, குளங்களில் வளர்க்கப்படுகிறது.
வீடுகள் மற்றும் தெருக்களில் அவ்வப்போது புகைபோட்டு கொசுக்கள் அழிக்கப்படுகிறது. டெங்கு பரவும் பகுதிகளை ஆய்வுசெய்ய வேலூர், கடலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 9 இடங்களில் மண்டல பூச்சியியல் ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் உள்ள குழு, டெங்கு காய்ச்சல் பரவும் இடங்களை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும். மேலும் தமிழகத்தில் கரோனா உள்ளிட்ட தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த 2,715 கூடுதல் சுகாதார ஆய்வாளர்கள் தற்காலிமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 2,894 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களில், காலியாக உள்ள 384 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழக முதல்வர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் மாவட்ட ஆட்சியர்கள் வாயிலாகவும் டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நோய் அபாயம் உள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை 4 வார காலத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.
டெங்கு பரவும் பகுதிகளை ஆய்வுசெய்ய வேலூர், கடலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 9 இடங்களில் மண்டல பூச்சியியல் ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.