

சென்னையில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 15 மண்டலங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவிவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 10-ம் தேதி முதல்பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. கரோனா பரவலைக்கட்டுப்படுத்த, இந்த கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடித்து நடக்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில், வருவாய் அலுவலர்கள், காவல் துறை, சுகாதாரத் துறை அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்டங்களில் கரோனா தடுப்பு பணிகளை முடுக்கிவிடவும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி, சென்னையில் 1ம் மண்டலம்- ஜானி டாம் வர்கீஸ், 2- பி.கணேசன், 3- டி.மோகன், 4- கே.பி.கார்த்திகேயன், 5- கே.நந்தகுமார், 6- நரவானே மனீஷ் சங்கர்ராவ், 7- எஸ்.சுரேஷ்குமார், 8- எஸ்.கோபால சுந்தரராஜ், 9- தீபக் ஜேக்கப், 10- எஸ்.வினீத், 11- டி.பிரபுசங்கர், 12- எல்.நிர்மல்ராஜ், 13- ஜெ.யு.சந்திரகலா, 14- பி.முருகேஷ், 15- கே.வீரராகவராவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.