

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால், சுற்றுலா பயணிகள் இன்றி மாமல்லபுரம் வெறிச்சோடியது. பின்னர், அரசின் பல்வேறு தளர்வுகளால் மீண்டும் கலைச்சின்ன வளாகங்கள் திறக்கப்பட்டன.
ஆனால், வெளிநாட்டு பயணிகள் இன்றி, உள்ளூர் சுற்றுலா பயணிகளே அதிகளவில் வந்து சென்றனர். தற்போது மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக குறைந்துள்ளது.
தளர்வுகள் வழங்கப்பட்ட பின்னர், நாள் ஒன்றுக்கு சுமார் 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர். ஆனால், தற்போது 500 முதல் 600 என்ற எண்ணிக்கையிலேயே சுற்றுலா பயணிகள் வருகை இருப்பதாக, தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பேரூராட்சி நிர்வாகம், தொற்று பரவலை தடுப்பதற்காக கலைச்சின்ன வளாகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட தூய்மைப் பணிகளை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து, உள்ளூர் வியாபாரிகள் சிலர் கூறும்போது, "மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியிலேயே 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், உள்ளூர் மக்களிடையே கரோனா அச்சம் ஏற்பட்டுள்ளது. இதே காரணத்தால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதாக கருதுகிறோம்" என்றனர்.
107 பேர் பாதிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 64 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 107 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ராயன்குட்டை தெருவைச் சேர்ந்த 88 வயது மூதாட்டி, கடந்த 3 நாட்களுக்கு முன் கரோனா அறிகுறி காரணமாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.