

தாமிரபரணியில் முக்கிய படித்துறைகளில் தண்ணீருக்குள் ஆயிரக்கணக்கான டன் துணிகள் மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் புனித நீர் மாசுபட்டு வருகிறது.
தோஷங்களை கழிக்க பக்தர்கள் தங்கள் ஆடைகளைஆற்றில் போடுகின்றனர். அவ்வாறு துணி மணிகளை ஆற்றில் போடுவதால் ஆறு மாசுபட்டு வருவது குறித்து பல்வேறு தன்னார்வ அமைப்பு களும் சுட்டிக்காட்டி வருகின்றன.
பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றில் தோஷம், பரிகாரம், தர்பணம் என்று ஒரு நாளில் போடப் படும் துணிகளின் எடை 200 முதல் 500 கிலோவை தாண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதுபோல் தாமிரபரணி பாய்ந்தோடும் வழிநெடுக முக்கிய தீர்த்தக் கட்டங்கள், படித்துறைகளில் இவ்வாறு தோஷம் கழிக்க துணிகள், கழிவுகள் போடப்படுவதால் நீர் மாசுபடுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்குமுன் பாபநாசத்தில் தாமிரபரணி கல்யாணதீர்த்தம் தூய்மை அறக்கட்டளை, தாமிரபரணி நதியை சுத்தம் செய்யும் குழுவினர், விக்கிரமசிங்கபுரம் தமிழக ஊர்க்காவல்படையினர் ஒருங்கிணைந்து ஆற்றில் இறங்கி, துணிகளை அப்புறப்படுத்தும் அரிய பணியை செய்தனர்.
இந்தப்பணியை தொடர்ந்து மேற்கொள் வேண்டும். பாபநாசத்தில் மட்டுமின்றி தாமிரபரணி பாய்ந்தோடும் பகுதிகளில் உள்ள முக்கிய படித்துறைகளிலும் இப்பணியை செய்ய வேண்டும்.
அத்துடன் ஆற்றங்கரைகளில் குறிப்பிட்ட இடங்களில் இரும்புக் கம்பிகளால் உருவாக்கப்பட்ட தொட்டிகளை வைக்கவும், அவற்றில் கழிவு துணிகளை போடவும் வழிவகை செய்ய வேண்டும். இது குறித்து அனைத்து தரப்பினரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கங்கை ஹரித்துவார்,காசி, ரிஷிகேஷ் போன்ற புனித தலங்களில் நதி ஓரத்தில் தொட்டிபோல் கம்பி வேலிகள் அமைத்து அதில் பரிகார துணிகளை போடவலியுறுத்துகிறார்கள். கண்ட இடங்களில் துணிகளை போடுவோருக்கு அங்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதே நடவடிக்கையை அரசுத்துறைகள் இங்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.