Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

குமரி வந்த வெளிநாட்டு பறவைகளின் காலில் வளையம்: குறியீடுகளை கண்டறியும் முயற்சியில் பறவைகள் ஆர்வலர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் வந்த வெளிநாட்டு பறவைகளின் காலில் வளையம் பொருத்தப்பட்டிருந்தது. அதில் உள்ள குறியீடுகள் பற்றி அறிய பறவைகள் ஆர்வலர்கள் முயற்சித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலும், நிலப்பரப்பும் சேரும் பொழிமுகம் பகுதிகளில் ஆண்டு தோறும் வெளிநாட்டு பறவைகள் முகாமிடுவது வழக்கம். மணக்குடி காயல், புத்தளம், சாமித்தோப்பு, ராஜாக்கமங்கலம் உப்பள பகுதிகளில் இவை தென்படும். பனி பிரதேசத்தில் இருந்து அக்டோபர் மாதம் இடம்பெயரும் இப்பறவைகள், பலஆயிரம் கிலோ மீட்டர் கடந்து இந்தியா வருகின்றன.

இப்பறவைகளை காண கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காயல் பகுதிகளில் பறவை ஆர்வலர்கள் முகாமிட்டிருந்தனர். சாமிதோப்பு உப்பளத்துக்கு ஐரோப்பிய நாட்டில் இருந்து வந்த இரு பறவைகளின் காலில் வளையம் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. செங்கால் உள்ளான் பறவைக்கு இடது காலின் மேல்பகுதியிலும், ஆலா பறவைக்கு வலது காலின் கீழ் பகுதியிலும் வளையம் பொருத் தப்பட்டிருந்தது. வளையத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் குறியீடு மற்றும் அடையாளங்கள் என்ன என்பதை கண்டறிய முடியவில்லை. அதுகுறித்து அறிய பறவை ஆர்வலர்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

துல்லியமாக தெரியவில்லை

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட பறவை ஆர்வலர் டேவிட்சன் சற்குணம் கூறும்போது, “காலநிலை மாற்றம், உணவு போன்றவற்றுக்காக பறவைகள் ஆண்டுதோறும் இடம்பெயர்வது வழக்கம். ஐரோப்பிய நாட்டு பறவைகள் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அதிகம் வருகின்றன. இதில் செங்கால் உள்ளான், ஆலா வகையைச் சேர்ந்த இரண்டு பறவைகளின் காலில் வளையம் பொருத்தப்பட்டிருந்தது.

இந்த பறவைகளை படமெடுத்து பார்த்தபோது வளையத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் குறியீடு, எழுத்துகள் துல்லியமாக தெரியவில்லை. அவற்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். எந்த நாட்டில் இருந்து அவை இடம்பெயர்ந்தது, அவை வாழும் சூழல், உணவு குறித்து குறிப்பிடப்பட்டிருக்கலாம். வேறு பறவைகள் ஏதும் வளையத்துடன் வந்துள்ளனவா என்ற ஆய்விலும் ஈடுபட்டுள்ளோம்” என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x