Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

மக்கள் விரும்பும் கீழவைப்பாறு சிப்பிகுளம் கடற்கரை: சுற்றுலா தலமாக்க வலியுறுத்தல்

கீழவைப்பாறு சிப்பிகுளம் கடற்கரையில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள். (கோப்பு படம்).

கோவில்பட்டி

கீழவைப்பாறு சிப்பிகுளம் கடற்கரையை சுற்றுலா தலமாக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கு பகுதியில் உள்ள கடற்கரையோர கிராமங்களில் கீழவைப்பாறு முக்கியத்துவம் வாய்ந்தது. கீழவைப்பாறு ஊராட்சியில் உள்ள சிப்பிகுளம் கடற்கரையில் அலைகள் சீற்றமில்லாமல் காணப்படும். சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த கடற்கரையாக காணப்படும் சிப்பிகுளம் கடற்கரையில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. ஆனாலும் கடல் அழகை ரசிக்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

வைப்பாறு காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக கடற்கரை வரு வார்கள். மேலும், முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு அமாவாசை தினங்களில் இங்கு ஏராளமானோர் கூடுவர். சிப்பிகுளம் கடற்கரையை சுற்றுலா தலமாக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வேலைவாய்ப்பு கிடைக்கும்

இதுகுறித்து சிப்பிகுளத்தைச் சேர்ந்த மீனவர் ஆர்.ரெக்சான் கூறியதாவது: தூத்துக்குடி வடக்கு பகுதியான கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளத்தில் மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவுமில்லை. இதனால் விளாத்திகுளம் தொகுதியில் பிரசித்தி பெற்ற சிப்பிகுளம் கடற்கரையை சுற்றுலா தலமாக்கலாம்.

சிப்பிகுளம் கடற்கரையில் முள்ளிச்செடிகள் இருந்தன. இந்த செடிகளை கடற்கரை செடிகள் என அழைப்போம். இந்த செடிகள் இருக்கும்போது உருவாகும் மணல்குன்றுகள் ரசிக்கும்படியாக இருக்கும். அதேபோல், கடலரிப்பு உள்ளிட்டவைகளில் இருந்து பாதுகாப்பு அரணாகவும் இருந்தது. ஆனால், அந்த செடிகள் அழிக்கப்பட்டுவிட்டன. தற்போது கடற்கரை பகுதி முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் கடற்கரையின் அமைப்பே மாறுபட்டுள்ளது.

சிப்பிகுளம் கடலில் நீராடி, பொழுதுபோக்க தினமும் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கடற்கரையை சுத்தம் செய்து, சுற்றுலா தலமாக்கினால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். அதேபோல், மீனவ கிராம மக்களுக்கான வேலைவாய்ப்பும் பெருகும்.

குறிப்பாக மீனவர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிக்கும். மீன், கருவாடு உள்ளிட்ட மீன் பொருட்கள், பனை பொருட்கள் விற்பனை செய்யலாம். மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு ஒரு மாற்று வேலை வாய்ப்பாக இது அமையும். அதேபோல், கடைகள் ஏலம், பொழுதுபோக்கு அம்சங்களுக்கான ஏலம், வாகனம் நிறுத்தும் இடம் ஆகியவற்றின் மூலம் வைப்பாறு ஊராட்சிக்கும் வருமானம் அதிகரிக்கும் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x