

அரக்கோணம் இரட்டைக் கொலைகளைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, திருமாவளவன் இன்று (ஏப். 08) வெளியிட்ட அறிக்கை:
"அரக்கோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட சோகனூரில் அர்ஜுனன், சூரியா ஆகிய இரண்டு தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலைகளைச் செய்தவர்களை உடனடியாகக் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இந்தப் படுகொலைகளைக் கண்டித்து எதிர்வரும் ஏப்ரல் 10 அன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
வாக்குப்பதிவு முடிந்ததற்குப் பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் தலித்துகள் தாக்கப்பட்டுள்ளனர். காட்டுமன்னார்கோவில், வானூர், திருப்போரூர், கிருஷ்ணகிரி மற்றும் அரியலூர் தொகுதிகளிலும்கூட தலித்துகளுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்ந்துள்ளன.
விசிக இடம்பெற்றுள்ள திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றி பெறப்போவதைத் தாங்க முடியாதவர்கள் தமிழ்நாட்டைச் சீர்குலைக்க மிகப்பெரிய சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளனர் என்பதன் அடையாளமே இந்தப் படுகொலை.
இத்தகைய சூழலில், இதனை வன்மையாகக் கண்டித்துக் குரலெழுப்ப வேண்டுமென அனைத்து ஜனநாயக சக்திகளையும் அறைகூவி அழைக்கிறோம்".
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.