

தமிழக அரசு இன்று வெளியிட்ட கரோனா கட்டுப்பாடு அறிவிப்பில், மத வழிபாடு செய்ய இரவு 8 மணி வரை அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரமலான் மாதத்தில் 30 நாட்களும் தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை கூடுதலாக தொழப்படும் என்பதால் 30 நாட்களுக்கு மட்டும் கூடுதலாக 10 மணி வரை தொழுகை நடந்த அனுமதிக்க வேண்டும் என மமக, எஸ்டிபிஐ, முஸ்லிம் மக்கள் கழகம் சார்பில் அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
வரும் 14-ம் தேதி ரமலான் நோன்பு ஆரம்பமாகிறது. 30 நாட்கள் நோன்புக் காலத்தில் ஐந்து வேலை தொழுகையைத் தாண்டி கூடுதலாக இரவு 9 மணி முதல் 10 மணி வரை தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை நடக்கும். இன்று அறிவிக்கப்பட்ட அரசின் கட்டுப்பாடு அறிவிப்பில் மத வழிபாட்டுக்கான நேரம் இரவு 8 மணி வரை மட்டும் அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 30 நாட்கள் இஸ்லாமிய மக்கள் தராவீஹ் தொழுகை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இஸ்லாமிய இயக்கத் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லா இன்று வெளியிட்ட அறிக்கை:
“தமிழகத்தில் கரோனா 2-வது அலையின் காரணமாக அதிகரித்து வரும் பாதிப்பினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 10-ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புனித ரமலான் மாதம் வரும் 14ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், இந்தக் கட்டுப்பாட்டினால் ரமலான் மாத இரவுத் தொழுகையை முஸ்லிம்கள் பள்ளி வாசல்களில் நிறைவேற்ற முடியாத சூழல் உருவாகும்.
கடந்த ஆண்டு முழு ஊரடங்கு காரணமாகப் பள்ளி வாசல்கள் பூட்டப்பட்டன. புனித ரமலானில் தராவீஹ் எனப்படும் இரவு நேரத் தொழுகையைப் பள்ளிவாசல்களில் நிறைவேற்ற முடியாமல் முஸ்லிம்கள் கவலை கொண்டனர்.
எனவே, சிறுபான்மை முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் பள்ளி வாசல்கள் இரவு 8 மணிக்கு பதிலாக இரவு 10 மணி வரை செயல்படத் தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்”.
இவ்வாறு ஜவாஹிருல்லா கோரிக்கை வைத்துள்ளார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் உமர் பாரூக், தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனுக்கு நேரில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
மேலும், முஸ்லிம் மக்கள் கழகம் சார்பில் அதன் தலைவர் ஏ.கே.தாஜுதீன் தமிழக அரசுக்கு இதே கோரிக்கையை வைத்துள்ளார்.