98.5 சதவீத மாணவர்கள் தோல்வி எதிரொலி தொடக்கக் கல்வி படிப்புக்கு மறு தேர்வு கோரி வழக்கு: பள்ளிக்கல்வி செயலர் பதிலளிக்க உத்தரவு

98.5 சதவீத மாணவர்கள் தோல்வி எதிரொலி தொடக்கக் கல்வி படிப்புக்கு மறு தேர்வு கோரி வழக்கு: பள்ளிக்கல்வி செயலர் பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

தமிழகத்தில் தொடக்கக்கல்வி பட்டய படிப்புக்கான தேர்வில் 98.5 சதவீத மாணவர்கள் தோல்வி அடைந்துள்ள நிலையில், மறு தேர்வு நடத்தக்கோரி தாக்கலான மனுவுக்கு பள்ளிக்கல்வி செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

நான் 2-ம் ஆண்டு தொடக்கல்வி பட்டயப் படிப்பு படித்து வருகிறேன். இப்படிப்புக்கு ஒவ்வொரு கல்வியாண்டிலும் 220 நாள் கல்லூரி நடைபெறும். 2019- 2020 கல்வியாண்டில் 160 நாள் மட்டுமே கல்லூரி நடைபெற்றது. கரோனா பரவல் அச்சம் காரணமாக மாணவர்கள் சரியாக வகுப்புக்கு செல்ல முடியவில்லை.

இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் தேர்வு நடைபெற்றது. அப்போது கரோனா பரவல் அதிகமாக இருந்ததால் வீடுகளிலிருந்து தேர்வெழுத சென்றது முதல் வீடு திரும்பும் வரை உடல் மற்றும் மனதளவில் பல்வேறு பாதிப்புகளை மாணவர்கள் சந்திக்க நேரிட்டது.

தற்போது தொடக்கல்வி பட்டய படிப்பு முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் தேர்வு எழுதியவர்களில் 98.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

எனவே, தொடக்கக்கல்வி பட்டய படிப்பு மாணவர்களுக்கு மீண்டும் இணையதளம் வழியாகவோ அல்லது மறு தேர்வோ நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பின்னர், மனு தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர், கல்வி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மாநில கவுன்சில் இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப். 24-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in