Published : 30 Nov 2015 11:43 AM
Last Updated : 30 Nov 2015 11:43 AM

எய்ட்ஸ் தொற்றில்லாத வளமான தமிழகத்தை உருவாக்கிட வேண்டும்: முதல்வர்

எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றில்லாத வளமான தமிழகத்தை உருவாக்கிட அனைவரும் உறுதி ஏற்று, அதன்படி செயல்பட வேண்டுமென்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள உலக எய்ட்ஸ் தின செய்தியில், "எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் முதல் நாள் "உலக எய்ட்ஸ் தினம்" அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தின மையக் கருத்து "புதிய எச்.ஐ.வி தொற்றில்லாத, புறக்கணித்தல் இல்லாத மற்றும் எய்ட்ஸ் மூலம் இறப்பில்லாத நிலையை ஏற்படுத்துதல்" என்பதாகும்.

தமிழகத்தில் எச்.ஐ.வி தொற்றை கண்டறிய 2038 நம்பிக்கை மையங்களும், 16 நகரும் ஆய்வகங்களும், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 55 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் மற்றும் 173 இணை கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும், 16 சட்ட உதவி மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்படுத்தி வருகிறது. மேலும், 9580 மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பயிலும் 13 முதல் 18 வயது வரை உள்ள வளரிளம் பருவ மாணவ மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் கல்வி மூலமாகவும், கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு 2021 செஞ்சுருள் சங்கங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்வதற்காக தமிழ்நாடு அரசால் ‘எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான தமிழ்நாடு அரசின் அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டு, 10 கோடி ரூபாய் வைப்பு நிதியிலிருந்து கிடைக்கும் வட்டியிலிருந்து எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்று பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, கல்வி உதவித்தொகை மற்றும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கிட ஆண்டுதோறும் நிதியுதவி, எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம், எச்.ஐ.வி. தொற்றுள்ளோர் கூட்டு மருந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு சென்று வர கட்டணமில்லா பேருந்து பயண அட்டை போன்ற பல திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்று உள்ளோரிடம் அன்பு செலுத்தி, அரவணைத்து, ஆதரவு காட்டுவதோடு, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றில்லாத வளமான தமிழகத்தை உருவாக்கிட அனைவரும் உறுதி ஏற்று, அதன்படி செயல்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x