Published : 08 Apr 2021 01:02 PM
Last Updated : 08 Apr 2021 01:02 PM

மக்கள் நலன் காக்க ஒன்றிணைவோம் வா; கரோனா பரவல் விழிப்புணர்வு இயக்கம்: ஸ்டாலின் அழைப்பு

''கரோனா இரண்டாவது அலை குறித்து மருத்துவர்களும் மக்கள் நல்வாழ்வுத் துறையும் எச்சரிக்கை செய்திருப்பதால், மீண்டும் ஒன்றிணைவோம் வா இயக்கம் மூலம் கரோனா குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். கபசுரக் குடிநீர், முகக்கவசம், சானிடைசர் வழங்க வேண்டும்'' என ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

“தேர்தல் நேரம் மட்டுமல்ல, எப்போதும் மக்களுடன் இணைந்திருக்கும் பேரியக்கம்தான் திமுக. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கரோனா பேரிடரால் தவித்த மக்களுக்கு உதவிடும் வகையில் 'ஒன்றிணைவோம் வா' எனும் செயல்பாட்டின் மூலம், கட்சிப் பாகுபாடின்றி அனைத்துத் தரப்பினருக்கான உணவு - மருத்துவ உதவி - அத்தியாவசியத் தேவைகளை திமுக நிறைவேற்றியது. கட்சி உடன்பிறப்புகளான அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் அதில் பங்கேற்றுத் தொண்டாற்றினர்.

இந்தக் கோடை காலத்தில் மக்களின் தாகம் தணிக்க திமுகவின் சார்பில் தண்ணீர் பந்தல்கள் அமைத்திடுங்கள். கரோனா இரண்டாவது அலை குறித்து மருத்துவர்களும் மக்கள் நல்வாழ்வுத் துறையும் எச்சரிக்கை செய்திருப்பதால் அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துங்கள். மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குங்கள். வாய்ப்புள்ள இடங்களில் முகக்கவசம், சானிடைசர் வழங்கிடுங்கள்.

தேர்தல் முடிவுகளில் நல்ல தீர்ப்பு நிச்சயம் வரும். எனினும், அதுவரை காத்திருக்காமல் மக்களுக்கான பணியை எப்போதும் போல இப்போதும் தொடர்ந்திட 'ஒன்றிணைவோம் வா'ருங்கள் உடன்பிறப்புகளே”.

இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x