Published : 08 Apr 2021 12:53 PM
Last Updated : 08 Apr 2021 12:53 PM

பல்கலை. துணைவேந்தர்கள் நியமனம்; இந்த அவசரம் ஆளுநருக்கு அழகல்ல! - துரைமுருகன்

துரைமுருகன்: கோப்புப்படம்

சென்னை

தேர்தல் முடிவு வருவதற்கு முன்னர் அவசர அவசரமாக, பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளதாக, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, துரைமுருகன் இன்று (ஏப்.08) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பொதுத் தேர்தல் 6.4.2021 அன்றுதான் நடந்து முடிந்திருக்கிறது. ஆட்சி மன்றத்திற்கான சூழலை இந்தத் தேர்தல் உருவாக்கியிருக்கின்ற நல் தருணம் இது. புதிய அரசு பல புதிய சிந்தனை திட்டங்களோடு பதவிக்கு வரும் என்ற நிலை மிகத் தெளிவாகத் தெரிகிறது.

வாக்கு எண்ணிக்கை எண்ணி முடிக்கப்பட்டு இருந்தால், இந்த நேரம், தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி பதவி ஏற்றிருக்கும். ஆனால், ஓட்டு எண்ணிக்கைக்கு இடைப்பட்ட இந்த ஒரு மாத காலம் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதுதான் மரபு.

புதிய அறிவிப்புகளை, அதுவும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் அதன் நிர்வாகப் பொறுப்பை பல ஆண்டுகளுக்கு ஏற்கப்போகும் துணைவேந்தர்களின் பெயர்களை ஆளுநர் அவசர அவசரமாக வெளியிட்டு இருப்பது ஆளுநர் பதவிக்கு அழகல்ல.

1. காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக எஸ். மாதேஸ்வரன்

2. கால்நடைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக செல்வகுமார்

இவை இரண்டும் ஆளுநர் அறிவித்ததாக செய்தித்தாள்களில் வெளிவந்த அறிவுப்புகள்.

பல நாட்களாக நிரப்பப்படாமல் இருந்த இந்தப் பதவிகளை புதிய அரசு வந்து நிரப்பினால் இமயமலை என்ன இரண்டாகவா பிளந்துவிடும்?

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: கோப்புப்படம்

இந்த இரண்டு போதாது என்று தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினராக, கிரிஜா வைத்தியநாதனை மத்திய அரசு அதன் பங்குக்கு நியமித்து இருக்கிறது.

தேர்தல் வருவதற்கு முன்பு இருந்த நடைமுறையில் இருந்த விஷயங்கள்தான் இவை. இதில், எந்த அரசியல் நோக்கமும் கிடையாது என்று ஆயிரம் காரணங்களை ஆளுநர் மாளிகை கூறினாலும், பொறுத்ததுதான் பொறுத்தீர், இன்னும் ஏன் ஒரு மாத காலம் பொறுக்கக் கூடாதா என்பதுதான் எமது கேள்வி.

முறையான துணைவேந்தர்களை நியமிக்காததால், அகில உலக புகழ் பெற்ற சென்னைப் பல்கலைக்கழகம் எப்படி சீர்கெட்டு அழிந்து நிற்கிறது என்பதைப் பல்வேறு ஊடகங்கள் எடுத்துக்காட்டியுள்ளன. முடிந்தால் ஆளுநரின் செயலாளர்கள் ஆளுநர் பார்வைக்குக் கொண்டு செல்லட்டும்.

இந்த அவசரம் ஆளுநருக்கு அழகல்ல!".

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x