

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பேட்டை செந்தமிழ்நகர்ப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள், 3 சிறுவர்கள் உட்பட 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் 3986 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், நெல்லை பேட்டை செந்தமிழ்நகர்ப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு நேற்று தொற்று உறுதியான நிலையில் இன்று மேலும் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சுகாதரப் பணியாளர்கள் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். அந்தப் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டோர் அனைவரும் தற்போது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இத்தனை பேருக்கு தொற்று ஏற்பட்டது எப்படி என்பதை கண்டுபிடிக்க தொடர்பு கண்டறியும் (Contract Tracing) பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கை:
இதற்கிடையில், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவின்படி மாநகர நல அலுவலர் டாக்டர். சரோஜா ஆலோசனைய்ன்படி மாநகரப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
பேருந்துகள், ஆட்டோக்கள், ஏடிஎம்.,கள், மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பாளையங்கோட்டைப் பகுதிகளில் உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த், சுகாதார அலுவலர் அரசகுமார் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. உடன் மேற்பார்வையாளர் முருகன், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர் கனகப்ரியா, அதிகாரிகள் சீதா லட்சுமி, அருள் செல்வன், கண்ணன் மற்றும் பணியாளர் மாய கண்ணன் இருந்தனர்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று மட்டும் 41 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று மாவட்டத்தில் மொத்த பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.