

தேனி எம்.பி ரவீந்திரநாத் கார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அமமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து, 50க்கும் மேற்பட்ட பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பெருமாள் கவுண்டன்பட்டியில் வாக்குச்சாவடியை தேனி எம்.பி ரவீந்திரநாத் நேற்று முன்தினம் ஆய்வு செய்ய வந்தார்.
அப்போது சிலர் அவரது கார்மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து கார் ஓட்டுநர் பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த பாண்டியன் (40) போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதில் எம்.பி ரவீந்திரநாத்தை சிலர் தாக்கி கொலை செய்ய முயன்றனர். தடுக்க முயன்ற என்னையும், பாதுகாவலர்களையும் தாக்க முயன்றதுடன், இரண்டு கார் கண்ணாடிகளையும் கல்வீசி சேதப்படுத்தினர் என்று தெரிவித்திருந்தார்.
அதன் பேரில் பெரியபாண்டி, ராஜாங்கம், ஜெயேந்திரன், மணிகண்டன், விஜயன், மாயி, கார்த்திக் உள்ளிட்ட 17-பேர் மீது போடி தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், பெருமாள்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த மாயி என்ற அமமுக பிரமுகரை போலீஸார் கைது செய்தனர்.
அவரை விடுதலை செய்யக்கோரியும் எதிர்தரப்பில் தாக்கியவர்களைவும் கைது செய்ய வலியுறுத்தியும் பெருமாள் கவுண்டன்பட்டியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.