Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

தேர்தலையொட்டி கூட்டம் அதிகரித்ததால் ஆம்னி பேருந்தில் 40% கூடுதல் கட்டணம்: பயணிகள் குற்றச்சாட்டு

சொந்த ஊரில் வாக்களிக்கச் செல்லும் கூட்டத்தை பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்துகளில் 40 சதவீதம் வரை அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

வேலைவாய்ப்பு, கல்வி, தொழில் உட்பட பல்வேறு காரணங்களுக்காக தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் தலைநகர் சென்னைக்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதுதவிர, தொடர் விடுமுறை, பண்டிகை காலங்களில் இது பல மடங்கு அதிகரிக்கும்.

இந்த கூட்டத்தைப் பயன்படுத்தி, ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால், அரசு பேருந்துகள் போல, ஆம்னி பேருந்துகளுக்கும்கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழக அரசை, மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, தேர்தலை முன்னிட்டு சொந்த ஊரில் வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து அதிக அளவில் மக்கள்கடந்த 4, 5-ம் தேதிகளில் புறப்பட்டுசென்றனர். அரசு விரைவு பேருந்துகளைவிட, ஆம்னி பேருந்துகள் அதிக வசதியுடன் இருப்பதால், அதில் பயணிப்பதை நடுத்தர மக்கள் விரும்புகின்றனர். ஆனால், இதையே வாய்ப்பாக பயன்படுத்தி, கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:

கடந்த 4, 5-ம் தேதி மாலை கோயம்பேட்டில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஆனால், அரசு விரைவு பேருந்துகள்வந்து, செல்வதில் தாமதம் ஏற்பட்டது. குடும்பத்தோடு வந்தவர்கள் வெகு நேரம் காத்திருக்க முடியாமல், வேறுவழியின்றி ஆம்னி பேருந்துகளை நாடினர். அவர்களோ வழக்கத்தைவிட 30 முதல் 40 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தி வசூலித்தனர்.

ஆம்னி முன்பதிவுக்கான தனியார்இணையதளங்களில் வெளிப்படையாகவே அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தேவை அதிகரித்துள்ளதால், ஆம்னி பேருந்துகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, தமிழக அரசு ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x