Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் தினமும் 5 முறை ஆய்வு செய்ய வேண்டும்: காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவு

மத்திய சென்னைக்கு உட்பட்ட தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், தொகுதிவாரியாக பிரிக்கப்பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லுரியில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். படம்: ம.பிரபு

சென்னை

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள மையங்களில் தினமும் 5 முறை காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 75 மையங்களில் மே 2-ம் தேதி எண்ணப்படுகின்றன. வாக் குச்சாவடிகளில் இருந்து பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங் களில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ் வொரு தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த அறையின் உள்ளேயும், வெளியேயும் கண் காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட் டுள்ளன. வாக்கு எண்ணும் மையங் களில் ‘ஸ்டிராங் ரூம்’ என்றழைக்கப்டும் அறையில்தான் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப் பட்டுள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக் கப்பட்டுள்ள அறைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணு வப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து ஆயுதப்படை போலீஸாரும், வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவு வாயிலில் உள்ளூர் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து வாக்கு எண்ணும் மையத் திலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட் டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் சுமார் 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள அறைகளில் உள்ள கண் காணிப்பு கேமரா காட்சிகளை 24 மணி நேரமும் பார்க்கும் வகையில் எல்இடி திரையும் வைக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் செய் யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, அந்தந்த பகுதி காவல் துறை அதிகாரிகள் நேற்று காலையிலேயே நேரில் சென்று ஆய்வு செய்தனர். காவல் நிலைய ஆய்வாளர், டிஎஸ்பி, எஸ்.பி, டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி ஆகியோர் வாக்கு எண்ணும் மையங்களுக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

குறைந்தபட்சம் ஒரு வாக்கு எண் ணும் மையத்தில் தினமும் 5 முறையா வது வெவ்வேறு காவல் துறை அதிகாரி கள் சோதனை நடத்தி இருக்க வேண்டும். ‘ஸ்டிராங் ரூம்’ அறை பூட்டின் ‘சீல்’ சேதம் அடையாமல் இருக்கிறதா, கண்காணிப்பு கேமரா காட்சிகள் சரியாக இருக்கிறதா, பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள போலீஸார் தங்களது பணிகளை சரியாக செய்கிறார்களா, பாதுகாப்பு குறைகள் இருக்கிறதா என்பதை காவல் துறை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் நாளன்று விதிமீறியதாக 163 வழக்குகள்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. ஜோலார்பேட்டையில் அமைச்சர் கே.சி.வீரமணி, பெரம்பூரில் அமைச்சர் பெஞ்சமின் ஆகியோருடன் திமுகவினர் வாக்குவாதம் போன்ற சில பிரச்சினைகளைத் தவிர பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை. இருந்தாலும், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நாளில் மட்டும் 163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x